உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு – 2024 (Global School-Based Student Health Survey – 2024) இன் இலங்கை அறிக்கை அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தலைமையில் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் குடும்ப சுகாதாரப் பணியக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.
இங்கு, உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு அறிக்கையின் முதல் பிரதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி உள்ளிட்ட அழைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், ஆய்வு அறிக்கையின் தரவுகள் குறித்து அறிவார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்த ஆய்வு அறிக்கை உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையாகும்.
இந்த ஆய்வின் மூலம் போஷாக்கு, உணவு, நடத்தை மற்றும் உடல் செயற்பாடுகள், மன ஆரோக்கியம், பல் ஆரோக்கியம், போதைப்பொருள் பயன்பாடு, தற்கொலை எண்ணங்கள், திட்டங்கள் மற்றும் முயற்சிகள், வன்முறை, காயங்கள், பாலியல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் பதின்ம வயது சுகாதார கண்காணிப்பு உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி, இந்தத் தரவுகள் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளிலும் ஏற்படுத்த வேண்டிய சாதகமான மாற்றங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் எந்தவொரு முதலீடும் நாட்டின் எதிர்காலத்திற்காக செய்யப்படுவதாகும் என்றும், இந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முக்கியமான இரண்டு துறைகளிலும் மேற்கொள்ளப்படும் கொள்கை மற்றும் மூலோபாய மாற்றங்கள் அனைத்தும் நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பாடசாலை செல்லும் பதின்ம வயது மாணவர்களிடையே சுகாதாரம் தொடர்பான நடத்தைகளை மதிப்பிடுதல், பல சுகாதாரத் துறைகள் ஊடாக ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணிகளை அடையாளம் காணுதல், பதின்ம வயது ஆரோக்கியத்திற்கான கொள்கை உருவாக்கம் மற்றும் நிகழ்ச்சித்திட்ட மேம்பாட்டிற்கு உதவுதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டில் 40 அரச பாடசாலைகளில் 8-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 3,843 மாணவர்களை உள்ளடக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.4% பேர் ஆரோக்கியமற்ற பானங்களை உட்கொள்வதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்றும் அறிக்கை காட்டுகிறது. மேலும், மாணவர்களில் 28% பேர் தினமும் இனிப்புப் பானங்களை உட்கொள்வதாகவும், 28.5% பேர் தினமும் உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தவிர, 29.3% பேர் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதாகவும், 40.9% பேர் தினமும் அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களில் 70.4% பேர் ஆய்வுக்கு முந்தைய வாரத்தில் ஒரு முறையாவது துரித உணவை உட்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களின் குறைந்த எடை சதவீதம் 21.4% ஆகவும், அதிக எடை சதவீதம் 12.1% ஆகவும் உள்ளதாக ஆய்வுத் தரவுகள் காட்டுகின்றன. மேலும், பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில், ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகளை புகைக்க முயற்சித்த அல்லது பரிசோதித்த மாணவர்களின் சதவீதம் 12.8% ஆக உள்ளதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
==============