அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள், ஈரான் இஸ்ரேலை மட்டுமல்ல, அமெரிக்காவையும் மிரட்ட முயற்சித்துள்ளதாகவும் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் எனவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் அல்லது காசா நரகமாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.
ஜனவரி 19 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதிலிருந்து, இன்று காலை, இஸ்ரேல் காசா மீது அதன் மிகவும் தீவிரமான தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
ஜபாலியா, காசா நகரம், நுசைரத், டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் உள்ளிட்ட காசா பகுதியில் வடக்கிலிருந்து தெற்கு வரை பல்வேறு பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமழான் மாதத்தில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காசா மக்களுக்கு எதிரான சியோனிச அழிப்புப் போரை மீண்டும் தொடங்குவதை எதிர்க்குமாறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களையும், உலகின் சுதந்திர மக்களையும் ஹமாஸ் கேட்டுக் கொண்டது.
மீண்டும் போருக்குத் திரும்பும் நெதன்யாகுவின் முடிவு, போர்க் கைதிகளைப் பலியிட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவாகும். பேச்சுவார்த்தை மூலம் அடைய முடியாததை, எதிரி போர் மற்றும் அழிவு மூலம் அடைய முடியாது என்றும் ஹமாஸ் கூறியது.