ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமி நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் அவர்கள் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
விண்வெளி ஆய்வுப் பணிக்காக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு புளோரிடா கடற்கரையில் இன்று பூமியில் தரையிறங்க உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் ஐந்தாம் திகதி எட்டு நாள் பயணமாக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இரண்டு விண்வெளி வீரர்களும், அவர்கள் பயணித்த ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக சரியான நேரத்தில் திரும்ப முடியவில்லை.
இதனால் அவர்கள் ஒன்பது மாதங்களுக்கு அங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், குறித்த இருவரையும் மீட்கும் பணிகளை நாசா முன்னெடுத்திருந்தது.
இதன்படி, நேற்று முன்தினம் அவர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ரொக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.
சுனிதாவும் வில்மோரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமியை அடைவார்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி இன்று காலை 10.15 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இவர்களை அழைத்துவரும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் இன்று அமெரிக்க நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.27) தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா மேலும் அறிவித்துள்ளது.