சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில், இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே ஒருநாள் தொடரின் பின்னர், T20 தொடரில் பங்கேற்று வருகின்றது.
இந்த நிலையில் இலங்கை – நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் T20 போட்டி நேற்று (14) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து வீராங்கனைகள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர்.
அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து வீராங்கனைகள் ஆரம்பம் முதலே தடுமாறியதோடு 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றனர்.
நியூசிலாந்து துடுப்பாட்டம் சார்பில் எம்மா மெக்லோய்ட் 44 ஒட்டங்களை எடுக்க, இலங்கை பந்துவீச்சில் மால்கி மாதரா 3 விக்கெட்டுக்களையும் இனோஷி பிரியதர்ஷினி மற்றும் கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 102 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மங்கைகள் சாமரி அத்தபத்துவின் அதிரடியோடு
போட்டியின் வெற்றி இலக்கினை 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 102 ஓட்டங்களுடன் அடைந்தனர்.
இலங்கை மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த சாமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் பெற்றார்.
நியூசிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெஸ் கெர் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அது வீணாகியது. இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 முன்னிலை அடைந்திருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.