தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்த வகையிலும், விசாரணைகளை தாமதப்படுத்த அரசாங்கம் எந்த விருப்பமும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டியிருந்தார்.
சட்டத்திற்கு பயந்து தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம் எனவும், அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
2023 டிசம்பர் 31ஆம் திகதி வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கை கைது செய்து முன்னிலைப்படுத்த மாத்தறை நீதவான நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தான் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி தேசபந்து தென்னகோன் தனது சட்டத்தரணிகள் ஊடகாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்னை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கோரிக்கை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.