நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள
15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய பிரஜைகள் குழு, யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மதக் குழுவிற்கான பிரசாரப் பணியிலும்,
தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடு செய்பவர்களாகவும் பணியாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வந்திருந்தனர்.
இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் நோய் குணமாக்கும் மத சேவையை
நடத்தத் தயாராகி வந்திருந்த நிலையில், இதற்கு எதிராக இந்து தேசியவாத அமைப்புகள் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்தன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு மத குருமார்களையும் நேற்று சனிக்கிழமை (08) அதிகாலை இந்தியாவின் சென்னைக்கு
நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு தளபாடங்கள் செய்யுமிடத்தில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த மேலும்
08 இந்தியப் பிரஜைகளும், உணவகங்களில் பணிபுரிந்த 5 இந்தியப் பிரஜைகளும் நேற்று கைது செய்யப்பட்டு பலாலி
விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டனர்.