முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் நேற்று (07) பி.ப 4.30 மணியளவில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநித்தி மற்றும் நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷ சூரியபெருமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக உயரதிகாரிகள், பிரதேச மக்களுடைய பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது.
முதல் கட்டமாக பழைய இயந்திர சாதனங்களை திருத்தம் செய்து இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்தமையினை அடுத்து இத்தொழிற்சாலை நடவடிக்கைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டது.
பின்னர் சிறிது காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பின் கீழ் இந்த தொழிற்சாலை இயக்கப்பட்டுவந்துள்ளது.
இறுதி யுத்தத்தின் பின்னர் இந்த தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டு மீள்குடியேற்ற காலத்தின் பின்னர் இயங்காமல் இருந்துவந்தது.
தற்போது சுமார் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த தொழிற்சாலை ஓரளவு சீரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தொழிற்சாலையின் பழைய இயந்திரங்களே மீண்டும் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பல இயந்திரங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. இதற்கு பதிலாக புதிய இயந்திர சாதனங்கள் நவீன வசதிகளுடன் சீரான முறையில் முழுமையாக இயங்குமாயின் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பினை பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Next article: யாழ் மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் – கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதுNext