விராட் கோலி, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் ரசிகராகவும் இருப்பார்கள், இருந்திருப்பார்கள். இப்போது அதிகம் பேசப்படுவது அவர் குடிக்கும் கருப்பு தண்ணீர்தான்.
கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இவரது ஃபேன் கிளப்பில் மெம்பர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, இவர் தனது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர் என்பதும் பலருக்கும் தெரியும்.
அதில் ஒன்றாக, அவர் கருப்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எப்போதும் பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருப்பு தண்ணீர் எனப்படும் தண்ணீரைத்தான் குடிப்பார். இதன் மூலம், அவர் தனது உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்பது தெரிந்திருக்கும்.
அது ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.4 ஆயிரம் என்று கூறப்படுகிறது. சில நிறுவனங்களில் கருப்பு தண்ணீர் என்ற பெயரில் ஒரு அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.30 முதல் ரூ.200 வரை ஆன்லைனில் விற்பனையும் செய்யப்படுகிறது.
எவியன் என்ற நிறுவனத்தின் எவியன் நேட்சுரல் ஸ்பிரிங் வாட்டர் எனப்படும் குறிப்பிட்ட தண்ணீரைத்தான் கோலி தேர்வு செய்து குடிக்கிறாராம். ஆனால், பலரும் இந்த தண்ணீரே கருப்பு தண்ணீர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கருப்பு தண்ணீர் என்பது நிறத்தில் நிறமற்ற நாம் குடிக்கும் அதே தண்ணீர்போலத்தான் இருக்குமாம்.உயர்தர, அதிக விலையுள்ள மிகத் தரமான, மினரல்கள் நிறைந்த தண்ணீரைத்தான் அடையாளத்துக்காக கருப்பு நீர் என்கிறார்கள்.
அதிக சத்துகள் நிறைந்த, மிகவும் அரிதான இடத்திலிருந்து பெறப்படும் தண்ணீராகவும் கருப்பு தண்ணீர் கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்று மக்கள் நம்புகிறார்களே தவிர, அறிவியல் உண்மை எதுவும் இல்லை.
பிரான்சின் ஏவியன்-லெஸ்-பெய்ன்ஸ் பகுதியிலிருந்து விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இந்த தண்ணீர், பனிப்பாறை மற்றும் மணல் வடிகட்டுகள் மூலம் உயர்தர வடிகட்டுதல் செயல்முறைக்கு உள்படுத்தப்படுவதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்.
இது மணல் வடிகட்டிகள் மூலம் வடிகட்டப்படுவதால், தண்ணீரில் தேவையான மினரல்கள் சேரும், அது தனது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் விராட் கோலி இதனை அதிகம் விரும்பி குடிக்கிறார் என்று கூறப்படுகிறது.