ColourMedia
WhatsApp Channel
Homeவிளையாட்டுபாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் 3 அதிரடி மாற்றங்கள்

பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் 3 அதிரடி மாற்றங்கள்

0Shares

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழாமில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிரடி மாற்றத்துக்கமைய முஹமட் ஆமிர், வஹாப் றியாஸ் மற்றும் ஆசிப் அலி ஆகிய மூன்று வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 10 நாட்களில் ஆரம்பமாவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்காக பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட குழாம் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20 சர்வதேச போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் போன்றவற்றில் விளையாடியிருந்தது. நேற்றுடன் (19) நிறைவுக்கு வந்த குறித்த தொடரில் பாகிஸ்தான் அணி 4-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியிடம் படுமோசமான தோல்வியினை சந்தித்திருந்தது.

இம்முறை உலகக் கிண்ண தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி அம்மண்ணில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை அவ்வணிக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட உலகக் கிண்ண தொடருக்கான குழாத்திலிருந்து, இங்கிலாந்து தொடரின் பின்னர் தற்போது மூன்று மாற்றங்களுடனான புதிய குழாம் இன்று (20) அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கினால் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடிய வீரர்கள் மூவருமே உலகக் கிண்ண குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இடது கை வேகப் பந்துவீச்சாளரான ஜுனைட் கான், சகலதுறை வீரரான பஹீம் அஷ்ரப் மற்றும் துடுப்பாட்ட வீரரான ஆபித் அலி ஆகிய மூவருமே இவ்வாறு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைத்த ஜுனைட் கான் அதனை சரியான முறையில் பயன்படுத்தவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக்கொண்ட பஹீம் அஷ்ரப் துடுப்பாட்டத்தில் வெறும் 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதுடன் பந்துவீச்சில் ஒரேயொரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.

அண்மையில் நிறைவடைந்திருந்த அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்று அசத்திருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஆபித் அலி உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்தார். இருந்தாலும் நேற்று (19) நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான இறுதி போட்டியில் கிடைத்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தாமல் வெறும் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனாலேயே இவர்கள் மூவரும் குழாமிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு உலகக் கிண்ண குழாமில் தவறவிடப்பட்ட இடதுகை வேகப் பந்துவீச்சாளரான முஹமட் ஆமிர் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள புதிய குழாமில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான குழாமில் ஆமிர் இடம்பெற்றிருந்தாலும் எந்தவிதமான போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இருந்தாலும் உலகக் கிண்ண தொடரில் வேகப் பந்துவீச்சாளரின் தேவை கருதி அவர் மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் ஆமிர் உலகக் கிண்ண குழாமில் இடம்பெறாமை குறித்து பாரிய சர்ச்சைகள் கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆபித் அலியின் வெற்றிடத்துக்காக இங்கிலாந்து மண்ணில் நான்கு போட்டிகளில் இரண்டு அரைச்சதம் விளாசி அசத்தியிருந்த 27 வயதுடைய மத்தியவரிசை துடுப்பட்ட வீரரனான ஆசிப் அலி குழாமில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு (2018) ஜூலையில் ஒருநாள் அறிமுகம் பெற்ற ஆசிப் அலி இதுவரையில் 16 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 342 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அத்துடன் இவரின் துடுப்பாட்ட சராசரி 31.09 சதவீதமாகும். ஆரம்பத்தில் உலகக் கிண்ண தொடருக்காக குழாமிலும் இடம்பெறாமல், இங்கிலாந்து அணியுடனான குழாமிலும் இடம்பெறாது கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தேர்வுக் குழுவினால் ஓரங்கட்டப்பட்டு வந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளரான வஹாப் றியாஸ், உள்ளூர் போட்டிகள் மூலம் தனது திறமையை நிரூபித்துள்ளார். எனவே, தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள புதிய குழாமில் ஒரு வீரராக அவரும் இடம்பெற்றுள்ளார்.

வஹாப் றியாஸ் இறுதியாக 2017இல் நடைபெற்றிருந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் குழுநிலை போட்டியிலேயே விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 79 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வஹாப் றியாஸ் 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 34.34 சதவீதமாகும்.

பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்து அணியுடனான தொடரிலிருந்து முழுமையாக விலகியிருந்த அணியின் முக்கிய வீரரான சதாப் கான் உலகக் கிண்ண அணியில் விளையாடுவார் என தேர்வுக் குழுவின் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இம்மாதம் 31ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

உலகக் கிண்ணத்திற்கான புதிய பாகிஸ்தான் குழாம்

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர்), பகர் சமான், இமாமுல் ஹக், ஆசிப் அலி, பாபர் அஸாம், ஹாரிஸ் சொஹைல், சுஹைப் மலிக், மொஹமட் ஹபீஸ், இமாட் வசீம், சதாப் கான், ஹஸன் அலி, வஹாப் றியாஸ், முஹமட் ஆமிர், ஷஹீன் கான் அப்ரிடி. மொஹமட் ஹஸ்னைன்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments