பொலித்தீன் பாவனை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட அதிகாரங்கள் பொலிஸாருக்கு வழங்கப்படாத நிலையில் தேசிய சுற்றாடல் சட்டத்தில் இது தொடர்பான ஒழுங்கு விதிகளை விரைவில் திருத்தம் செய்வதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (08) நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
திருப்திகரமான, வினைத்திறனான மக்கள் சேவையை மகிழ்ச்சியோடு வழங்கக்கூடிய பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ்மட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து, அவர்களது நலன் பேணல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அச்செயற்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஆராய்ந்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்தல், இணைந்தபடி கொடுப்பனவினை உயர்த்துதல், பொலிஸ் நிலையங்களின் வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பூரண சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையை விரிவுபடுத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, இதற்காக பொலிஸ் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமானது என ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
ஹெரோயின் பாவனையாளர்கள் மற்றும் அதற்கு அடிமையானவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் பாவனையாளர்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் அமைச்சுக்களின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.