நீர்கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசங்களில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்களின் இரவு நேரங்களில் கண்ணாடிகளை உடைத்து 62 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணனி, செல்லிடத் தொலைபேசிகள் உட்ப பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை திருடிய பிரதான சந்தேக நபர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (27) மாலை தெரிவித்தனர்.
குளியாபிட்டிய, கம்புராபொல, மூனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த குடகொலவகே களுவாராச்சிகே சஞ்சீவ கயான் களுவாராச்சி என்ற 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபராவார். ஏனைய ஆறு சந்தேக நபர்களும் கொழும்பு -12 வாழைத்தோட்ட பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.
இதுதொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ஹேரத் தெரிவித்ததாவது,
பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்கா பஸ் நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவராவார.
அத்துடன் இவர் ஒரு புற்று நோயாளியாவார். வுத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள பிரபல இலத்திரனியல் விற்பனை நிறுவனங்களின் கண்ணாடிகளை இரவு வேளையில் உடைத்து அங்கிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணனிகள், செல்லிடத் தொலைபேசிகள், கசட் ரெக்கோடர்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை சந்தேக நபர் திருடியுள்ளார்.
அதற்கு முன்னதாக கந்தானைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததன் பின்னர் நீர்கொழும்பில் உள்ள வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிலையம் ஒன்றில் சாரதியாக தொழில் செய்துள்ளார்.
கட்டுநாயக்கா பிரதேசத்தில் வாடகைக்கு அறையொன்றைப் பெற்று அங்கிருந்து தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இதன்போது மீண்டும் போதைப் பொருள் பாவிக்க ஆரம்பித்துள்ளார்.
சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புக்கு வாடகை வாகனப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இரவு வேளையில் திரும்பி வரும் போது வத்தளை பிரதேசத்தில் உள்ள சினிமா தியேட்டர் அருகில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அதன்போது அருகில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையத்தின் கண்ணாடியை கல்லொன்றினால் உடைத்து அங்கிருந்த மடிக்கணனி மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் என்பவற்றை திருடிக் கொண்டு அவைகளை தனது வாடகை வாகனத்தில் ஏற்றிக் கட்டுநாயக்காவில் உள்ள தான் தங்கியுள்ள அறைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் அவைகளை நண்பர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு குறைந்த விலைக்கு விற்னை செய்து அந்த பணத்தில் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
விமான நிலைய தீர்வையற்ற கடைகளில் இவைகளை கொள்வனவு செய்வதன் காரணமாக குறைத்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக சந்தேக நபர் தன்னிடம் பொருட்களை வாங்குபவர்களிடம் இதன்போது கூறியுள்ளார்.
வத்தளை விற்பனை நிலைய்தில் திருடப்பட் பொருட்களின் பெறுமதி 26 இலட்சம் ரூபா என வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இரவு 11.45 மணியளவில் நீர்கொழும்பு சாந்த ஜோசப் வீதியில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் உபகரன விற்பனை நிலையம் ஒன்றின் வாயில் கண்ணாடியை கல்லொன்றினால் உடைத்து அங்கிருந்த மடிக்கணனி, செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை திருடியுள்ளார்.
திருடிய உபகரணங்களை கட்டுநாயக்காவில் உள்ள தனது அறையில் வைத்துவிட்டு மீண்டும் அதிகாலை 2.15 மணியளவில் அங்கு வந்து திருடியுள்ளார்.
திருடிய பொருட்களை தெல்வத்தை சந்தி வரை சுமந்து சென்று அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் தனது அறைக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையத்தில் 36 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் விசாரணை ஆரம்பித்ததை அடுத்து கொழும்பைச் சேர்ந்த சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வத்தளை விற்பனை நிலையத்தில் திருட்டை மேற்கொண்டது பிரதான சந்தேக நபர் என தெரிய வந்துள்ளது.
பின்னர் வத்தளை மற்றும் நீர்கொழும்பு விற்பனை நிலையங்களில் திருடப்பட்ட பொருட்களில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் திருடப்பட்ட பொருட்களைவ விற்பனை செய்வதற்காக சென்றபோதே கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களின் தொடர்பு பிரதான சந்தேக நபருக்கு கிடைத்துள்ளது.
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாரத்ன த சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லவித் ரோஹன ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நீர்கொழம்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் வழிகாட்டலின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ஹேரத்தின் தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ரஜித்த, சார்ஜன்ட்களான ஜினதாச, வீரசிங்க, வசந்த, கான்ஸ்டபிள்களான ஹரிச்சந்ர, சரத், கருணா நாயக்க, நிரோசன், பிரேமலால், அபேசிங்க, நிசாந்த, நாணயக்கார. மதுசங்க, பெரோ ஆகியோர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இதேவேளை பிரதான சந்தேக நபர்களை நேற்று திங்கட்கிழமை (27) நீதிமன்றில் ஆஜர் செய்தபோது நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.