நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்யும் உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் காவல்துறையினர் விசேட பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தினால் நேற்று இந்த மனுக்கள் பரிலீசனை செய்யப்பட்டன.
மாலை வரையில் தொடர்ந்து இந்த பரிசீலனை நடவடிக்கையில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது தமது பதிலிறுப்பை மேற்கொள்வதற்காக, சட்ட மா அதிபர் கால அவகாசம் கோரி இருந்தார்.
இதன்படி இன்று முற்பகல் 10.00 மணி வரையில் குறித்த பரிசீலனைகளை ஒத்தி வைத்ததுடன், இன்று ஆயம் கூடும் போது சபாநாயகரும் தமது பதிலிறுப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.
அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன.