நீர்கொழும்பு கடற்கரை வீதியில்(காமாச்சி ஓடை ) அதி நவீன வர்த்தக கட்டிட தொகுதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை அமைப்பதற்கு நீர்கொழும்பு மாநகரசபை திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான கூட்டம் ஒன்று நீர்கொழும்பு மாநகரசபை முதல்வர் தயான் லான்ச தலைமையில் கடந்த புதன்கிழமை(19) மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் குமார குணரத்ன,மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், கட்டிட வரைபட கலைஞ்ர்கள், பொறியாளர்கள், நீர்கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடற்கரை வீதியில்(காமாச்சி ஓடை ) தற்போது டட்லி சேனநாயக்க பொதுச்சந்தை அமைந்துள்ள இடத்திலேயே குறித்த கட்டிடத்தை அமைப்பதற்கு மாநகரசபை திட்டமிட்டுள்ளது.
இப் பல்நோக்கு கட்டிடத்தொகுதியில் 110 குத்தகை வீடுகளும் 50 குத்தகை வர்த்தக நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாகவும் இக் கட்டிடத்தில் திருமண வரவேற்பு மண்டபம், அதி நவீன திரையரங்கம், உடற்பற்சி நிலையம் ஆகியனவும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்கள்.
இத் திட்டம் தொடர்பான அறிக்கை விரைவில் நீர்கொழும்பு மாநகர சபை சபைக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்கள்.