கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 32 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று மதியம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி காவல்துறை பிரிவு பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவையிடம் இதனை உறுதிப்படுத்தினார்.
கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கைத்தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்ததில், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கும் இடையில் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பெண்ணை தாமே கொலை செய்ததாக சந்தேகத்துக்குரியவர் ஒப்புக்கொண்டதாக கிளிநொச்சி காவல்துறை பிரிவு பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபரின் ஒப்புதல் வாக்கு மூலத்தில்,
“குறித்த பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையது தான். அதனால் தனியே கூட்டிச் செல்லுமாறு அவள் வற்புறுத்தினாள்.
பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்து விடுவோம் என்று முடிவெடுத்து, 28 ஆம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.
பின்னர் அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்தோம்.
மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம்.
வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கி வந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது.
அவள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவளது கழுத்தில் தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது.
கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.
பின்னர் இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக அவளது பாவாடை, மேற் சட்டை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உடலை அருகில் இருந்த வயல் கால்வாயிற்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டேன்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு, ஹேன்பேக் மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீட்டுக்கு வந்தேன்.
வீட்டின் பின்பக்கமாக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள், ஹெல்மட் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன்.
மருந்தை குடித்து நானும் சாவோம் என்று எண்ணினேன்.பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீட்டுக்குள் ஒளித்து வைத்திவிட்டேன்.
சம்பவ இடத்தில் பெல்ட் மற்றும் சில தடயங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன்.
இக் கொலையை நான் மட்டுமே செய்தேன், சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் காட்ட முடியும். நான் தான் இதனை செய்தேன்” என குறித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கொலையுடன் வேறு எவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் சந்தேகத்துக்குரியவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெற்றன.
இதேநேரம், குறித்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் கொலை செய்யப்பட்ட யுவதியை அடையாளம் காட்டியதுடன், விசாரணைகளுக்கு பெரிதும் உதவிய எமது பிராந்திய செய்தியாளர் எஸ்.என். நிபோஜனை காவல்துறையினர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.