தமக்கு எதிரான பிடியாணை மற்றும் சாட்சி ஆவணங்களின் பிரதிகளை வழங்குமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் சர்வதேச காவற்துறையினரின் கிளையூடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்களிக்குமாறு, சட்டமா அதிபரிடம் கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிணை முறி விநியோக மோசடிக் குற்றச்சாட்டில் அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், இன்னும் அவர் கைதாகவில்லை.
அவர் சிங்கப்பூரில் வசித்து வருவதாக சர்வதேச காவற்துறையான இன்டர்போல் இலங்கைக் காவற்துறையினருக்கு தெரியப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவருக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிடியாணையின் அடிப்படையில் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் அடுத்த வாரம் வழக்கு விசாரணைக்கு வரும்போது விளக்கமளிக்குமாறு சட்ட அதிபரை, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதம நிறைவேற்றாளர் கசுன் பலிசேன ஆகியோர் இன்று மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க இதன்போது உத்தரவிடப்பட்டது.