நீர்கொழும்பு கட்டானை பிரதேசத்தில்(ரூக்வத்தன சந்தி) சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஆறு வீடுகளை நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நேற்று (21) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
கட்டானை பிரதேச சபைக்குட்பட்ட ருக்கத்தன்ன சந்தியில் பேஸ்லைன் வீதியின் தெற்கு பகுதியில் வீடுகளை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோதமாக தகரக் கொட்டகையினால் அமைக்கப்பட்டிருந்த வீடுகளே பெக்கோ இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டன.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உடன் இருந்தனர். கட்டானை பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.
இந்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 28 வீடுகளில் ஆறு வீடுகளே நீதிமன்ற உத்தரவில் நேற்று அகற்றப்பட்டன. ஏனைய வீடுகளை அகற்றுவதற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
தாங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்து வருவதாகவும், வீடுகள் அகற்றப்பட்டமையினால் தாங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாகவும், ஜனாதிபதி தமக்கு நியாயம் பெற்றுத் தரவேண்டும் எனவும் அகற்றப்பட்ட வீட்டுரிமையாளர்கள் தெரிவித்தனர்.