உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து முக்கியமான மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து கவனம் செலுத்துவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை அவசரமாக கூடியது. இந்தக்கூட்டத்திலேயே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதலாவது, நீதிமன்றத்தின் தீர்ப்பை விரைவாக பெற்றுக்கொள்வதற்கான சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்வது. இரண்டாவது இயலுமாயின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுவை வாபஸ் பெறுவது. இந்த இரண்டு முயற்சியும் சாத்தியப்படா விட்டால் 2015 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலில் வெளியான எல்லை நிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் பற்றி ஆராய்வது என்பது மூன்றாவது தீர்மானமாகும்.
பாராளுமன்றக்கட்டத்தொகுதியல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் சகல கட்சிகளினதும் தலைவர்கள,; சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்தல் நடத்துவதை தாமதிப்பதற்கு இடமளிக்க முடியாதென ஏகமனதாக தெரிவித்தனர். நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இந்தக் கூட்டத்தில் முக்கியமான இந்த மூன்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிட்த்தக்கது.