திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.
சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில் 27.07.2018 அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கருணாநிதி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் என தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி வைத்தியசாலைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இதற்கிடையே, காவேரி வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கைகள் தொண்டர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்திக்கும் போது வெளியான புகைப்படங்களும் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தது.
இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
மாலை 6.30 மணிக்கு காவேரி வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கவலை அளிக்கும் அறிக்கை வெளியானதை தொடர்ந்து காவேரி வைத்தியசாலையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால், அங்கு கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு வர தொடங்கினர். திமுக நிர்வாகிகளும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வைத்தியசாலைக்கு வருகை தந்தனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஒருவித குழப்பமான சூழல் அங்கு ஏற்பட்டது.
இரவு முழுவதும் அவர் உடல்நிலை குறித்து எந்த தகவல்களும் வராததால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். இன்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்ற வைத்தியர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியானது.
பிற்பகலில், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதே நேரத்தில், காவேரி வைத்தியசாலை வளாகத்தில் மூன்று இணை ஆணையர்கள் தலைமையில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
தடுப்புகள் அமைக்கப்பட்டு வைத்தியசாலை வளாகத்தை பொலிஸார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனினும், உறுதி குலையாத தொண்டர்கள் எழுந்து வா தலைவா என குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரின் மறைவை ஏற்க முடியாத தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் தவித்து வருகின்றனர்.
(மாலைமலர்)