கல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க இருக்கும் பிள்ளைகளை கல்விமான்களாக உருவாக்குவதற்கு கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (03) முற்பகல் அநுராதபுரம் சுவர்ணபாலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வியின் மூலமே ஒரு மனிதனிடம் சிறந்த ஒழுக்க பண்பாடுகள் உருவாகின்றன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கல்விக்காக முடியுமான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
1876 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட பாடசாலையான அநுராதபுர சுவர்ணபாலி வித்தியாலயத்தின் 142 வருட கல்விப் பயணத்தை ஜனாதிபதி பாராட்டினார்.
இன்று முற்பகல் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சந்திராணி பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க, பாடசாலை அதிபர் ரமணிவாசல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேநேரம் அநுராதபுரம் தீபானி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி இன்று மாணவர்களிடம் கையளித்தார்.
இப்பாடசாலையிலும் மாணவர்கள் ஜனாதிபதி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, பாடசாலை பிள்ளைகளுடன் சுமூகமாக கலந்துரையாடி அவர்களின் விபரங்களை கேட்டறிந்தார்.
1954 ஆம் ஆண்டு பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அநுராதபுரம் தீபானி மகா வித்தியாலயம் 1957 ஆம் ஆண்டு செப்டெம்பர் 2 ஆம் திகதி அரசாங்க பாடசாலையாக மாற்றப்பட்டது. இன்று விஞ்ஞானம், கலை, வர்த்தகம் ஆகிய துறைகளில் சுமார் 1000 மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர். ´அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை´ திட்டத்தின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2 கோடி 85 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதேநேரம் அநுராதபுரம் இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி அன்னதான மண்டபமும், மூன்று மாடி மாணவர் மத்திய நிலையமும் ஜனாதிபதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப திட்டத்தின் கீழ் 213 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பேராசிரியர் கனத்தேகொட சத்தாரதன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் பெளத்த பாலி கற்கைத் துறையின் பேராசிரியர் பாத்தேகம ஞானீஸ்சர தேரரினால் எழுதப்பட்ட நூல் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, துமிந்த திசாநாயக்க, சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, வட மத்திய மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)