போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயக்கம் வெளியிட்டுள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே இறுதி முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் கூடியது. இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது இவ்வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரவுள்ள சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்திற்கு தயாராகுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூர் உடன்படிக்கை ஒப்பந்த தொடர்பாக விவாதத்திற்கு தயாராகுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான அஜித் பீ பெரேரா எழுந்து நாட்டில் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டு வருவது தொடர்பில் பிரதமரின் நிலைப்பாட்டை வினவினார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில்,
மரண தண்டனையை அமுலுக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவாக ஆராய வேண்டியுள்ளது. மரண தண்டனை அமுல்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைக்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்படும். ஆகவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியே முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது யோசனை முன்வைத்ததுடன் அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என அஸ்கிரிய, மல்வத்து பெளத்த பீடங்கள் உட்பட பெளத்த அமைப்புகள் பலதும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டு வரவேண்டாம் என்று கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.