இந்தியா – இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இலங்கை கேப்டன் பெரேரா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் முதன்முறையாக ஷ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். தொடக்க வீரர் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. இரண்டு வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து மற்றும் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்தனர்.
தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லக்மல் முதல் ஓவரை வீசினார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால் இலங்கையின் பந்து வீச்சில் அனல் பறந்தது. முதல் ஓவரில் இந்தியா ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட் ஆனார். அப்போது இந்தியா ரன்ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். 3-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஒரு ரன் எடுத்தது. 4-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். இந்த ஓவரில் இந்தியா ரன்ஏதும் எடுக்கவில்லை. 5-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார். இவர் 13 பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க வீரர்களை இழந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் ஐந்து ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு பவுண்டரி அடித்தார். 9-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் தினேஷ் கார்த்திக் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. 13-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் மணீஷ் பாண்டே ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 14-வது ஓவரை பிரதீப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 16 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
6-வது விக்கெட்டுக்கு டோனி உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் இந்தியாவை இந்த ஜோடி கரை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16-வது ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். அப்போது இந்தியா 28 ரன்கள் எடுத்திருந்தது.
7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். புவனேஸ்வர் குமார் ரன்ஏதும் எடுக்காமல் லக்மல் பந்தில் ஆட்டம் இழந்தார். 17 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது. டோனி 2 ரன்னுடனும், குல்தீப் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
அவுட்டான வீரர்க்ள எடுத்த ரன்கள்: ரோகித் சர்மா 2, தவான் 0, ஷ்ரோயஸ் அய்யர் 9, தினேஷ் கார்த்திக் 0, மணீஷ் பாண்டே 2, ஹர்திக் பாண்டியா 10, புவனேஸ்வர் குமார் 0
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. மணீஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. எம்.எஸ். டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. சாஹல்.
இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. உபுல் தரங்கா, 2. தனுஷ்கா குணதிலகா, 3. திரிமானே, 4. மேத்யூஸ், 5. அசேலா குணரத்னே, 6. நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), 7. திசாரா பெரேரா, 8. சுசித் பதிரனா, 9. சுரங்கா லக்மல், 10. அகிலா தனஞ்ஜெயா, 11. நுவான் பிரதீப்.