யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – சுழிபுரத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
நேற்று பிற்பகல் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதலாம் தரத்தில் கல்வி கற்ற குறித்த மாணவி, நேற்று மதியம் பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது வெளியே சென்றிருந்த அவரின் தாய், பிற்பகல் 3 மணியளவில் வீடு திரும்பிய போது மகளைக் காணவில்லை எனத் தாயார் தெரிவித்தாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலில் சிறுமி சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேர் வட்டுக்கோட்டை காவற்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இன்று மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்தே மேலதிக விபரங்களை வழங்க முடியும் என்று வட்டுக்கோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.