வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் என்ற அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறமையை அதிகரிக்கும் முகமாக அவர்களுக்கு எதிர்வரும் வருடங்களில் அவர்களின் வாசிப்புக்கு ஏற்ப பதக்கங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக 809 தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் மூலமாக மாணவர்களின் வாசிப்பு திறமையை விருத்தி செய் யும் நோக்கத்துடன் 3312 பாடசாலைகளுக்கு 700 மில்லியன் ரூபாய் நிதி நேற்று அலரி மாளிகையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி அமைச்சு மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இன்று வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்கான நிதி வழங்கப்படுகின்றது.
அதன்படி மேல் மாகாணத்தில் 61 பாடசாலைகளுக்கும்(17.8 மில்லியன்) மத்திய மாகாணத்தில் 141 பாடசாலைகளுக்கும் (34.6 மில்லியன்) தென் மாகாணத்தில் 11 பாடசாலைகளுக்கும் (0.3 மில்லியன்) வட மாகாணத்தில் 199 பாடசாலைகளுக்கும் (51.8 மில்லியன்) கிழக்கு மாகாணத்தில் 221 பாடசாலைகளுக்கும் (62.5 மில்லியன்) வடமேல் மாகாணத்தில் 62 பாடசாலைகளுக்கும் (18.9 மில்லியன்) வடமத்திய மாகாணத்தில் 24 பாடசாலைகளுக்கும் (8.3 மில்லியன்) ஊவா மாகாணத்தில் 49 பாடசாலைகளுக்கும் (13.6 மில்லியன்) சப்ரகமுவ மாகாணத்தில் 41 பாடசாலைகளுக்கும் (10.9 மில்லியன்) ரூபாவுமாக மொத்தமாக 809 தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை பாடசாலைகள் சரியான முறையில் பயன்படுத்தி அதன் உச்ச பல னை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
வாசிப்பதனால் மாத்திரமே மாணவர்கள் பல புதிய விடயங்களை தெரிந்து கொள்ள முடியும். புதிய விடயங்களை தெரிந்து கொள்ளாமல் மாணவர்கள் கல்வியிலும் முன்னேற முடியாது.
பிரசித்தி பெற்ற தலைவர்களையும் அவர்களுடைய வாழ்க்கை வரலாறையும் நாங்கள் தேடிப்பார்ப்போமேயானால் அவர்கள் அனை வரும் வாசிப்பில் அதிக அக்கறை செலுத்தி இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே இந்த மாணவர்கள் வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொள்வதன் மூலம் இந்த நாட்டில் சிறந்த பிரஜைகளாக உருவாக முடியும் என்றார்.