மங்கள தெரிவிப்பு; நாமலே அதிகம் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்
நவீன இணையத்தளங்களின் சதித்திட்டங்கள் ஊடாக மக்களை திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் மக்களை திசைதிருப்பும் அதி நவீன இணையத்தளமான பொக்ஸ் தொழில்நுட்பத்தை எமது நாட்டில் அதிகம் பாவிப்பது நாமல் ராஜபக் ஷவாவார் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணைத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இலங்கை இதழியல் கல்லூரியில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சதித்திட்டங்கள் மூலம் சாதாரண இராணுவத்துக்கு அரசாங்கத்தை வீழ்த்தமுடியாது. மாறாக டோலர் இராணுவத்துக்கே அரசாங்கங்களை வீழ்த்த முடியும். டோலர் ராணுவம் என்பது ஆயிரக்கணக்கான பொய் தகவல்களை சேகரித்துக்கொண்டு அறைக்குள் இருந்துகொண்டு மணித்தியாலயத்துக்கு ஒன்று வீதம் இணையத்தளங்களில் தொடர்ந்து அவற்றை வெளியிடுவதாகும். ஒரே தகவல் பல இணையத்தளங்களில் வரும்போது உண்மையான ஊடகவியலாளர்களும் அதனை அதில் இருந்து எடுத்து பிரதான ஊடகங்களில் பிரசுரிக்கின்றனர். பின்னர் அந்த செய்தி முழு நாட்டிலும் உண்மையாக்கப்படுகின்றது.
அத்துடன் டோலர் ராணுவம் இன்று இலங்கையிலும் சதித்திட்டம் செய்து வருகின்றது. அது மாத்திரமல்ல இந்த டோலர் ராணுவத்தையும் விடவும் பயங்கமானதொன்றும் இருக்கின்றது. அதுதான் பொக்ஸ் தொழிநுட்பமாகும். இது இணைத்தள குறியீடொன்றின் மூலமே செயற்படுத்தப்படுகின்றது. இதுதொடர்பாக நாங்கள் ஆய்வுசெய்து பார்க்கும்போது இதன் அடிப்படை ரஷ்யா, லிபியா போன்ற நாடுகளிலேயே உள்ளது. இந்த பொக்ஸ் தொழிநுட்பத்தை அதிகம் பாவிப்பது எமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வாகும்.
அத்துடன் இந்த வருடம் மாத்திரம் நாமல் ராஜபக்ஷ்வின் மொத்த .ெ பொக்ஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 100வீதம் திடீரென அதிகரித்துள்ளது. இதனை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். மிகவும் திட்டமிட்டு மக்களை திசைதிருப்ப புதிய தொழிநுட்பங்கள் பாவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் 21ஆம் நூற்றாண்டில் இணைத்தளங்களுக்கு இடைக்கால தடை என்பது பொருத்தமற்றதொன்றாகும். லங்கா ஈ நியூஸ் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் அறிக்கைகள் செய்திகள் வேறுவழியில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் அரசியல் வாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் பிரச்சினை இருக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தலாம். மாறாக அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் நண்பர்களாக இந்தால் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியாது. அத்துடன் நாட்டில் இன்று சட்டத்தின் ஆட்சி இடம்பெறுகின்றது. கடந்த காலத்தையும் விடவும் இந்த காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வழியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரச ஊடகங்கள் எதிரணியினரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் நிலை இருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒருசில தனியார் ஊடகங்களைவிட அரச ஊடகங்கள் நேர்மையாக செயற்படுகின்றன. அத்துடன் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளின் கையாளர்கள்போன்று செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அந்த நிலை தற்போது மாறியுள்ளது.
ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட ஊடக பிரதானிகள் மற்றும் ஆசியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் ஒருசிலரே சமுகம் தந்திருந்தனர். பிரதான பத்திரிகை ஆசிரியர்கள் வரவில்லை. ஆனால் இந்த பத்திரிகை ஆசிரியர்கள் மீண்டும் பிரச்சினையை வெளிக்கொண்டுவருவதற்கென்றால் இரவு பகலாக செயற்படுவார்கள்.
அதேபோன்று நாட்டில் இனவாதத்தை தூண்டிவரும் தேரர்களை வீரர்களாக்குவதற்கும் சில பத்திரிகைகள் முயற்சிக்கின்றன. அது தொடர்பான செய்திகளை முன்பக்கத்தில் பாரிய எழுத்தில் பிரிசுரிக்கின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற பித்தலாட்டங்களை மீண்டும் சில ஊடகங்களின் அனுசரணையுடனே மேற்கொள்ள திட்டமிடப்படுகின்றன.
எனவே நாங்கள் தற்போது அடைந்திருக்கும் ஊடக சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ள அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். அதற்காக நீண்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும் என்றார்.