தூய்மையான நீர்கொழும்பு நகர உருவாக்கத்தை இலக்காக் கொண்டு, நகரங்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான துப்புரவு ஏற்பாடு வசதிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் கடந்த வெளிலக்கிழமை (8) நீர் கொழும்பு கடற்கரை பூங்காவில் நடைபெற்றது.
குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள், என்பவற்றிலிருந்து வெளியாகும் கழிவு நீர் மற்றும் மலசலக் கழிவு என்பவற்றை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் பயனாக நீர்கொழும்பு நகரை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள நிலக்கீழ் நீர் சுத்தமடைவதுடன், கழிவு நீரினால் ஏனைய நீர் வளங்கள் பாதிப்படைவது பெருமளவு மட்டுப்படுத்தப்படும்.
பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 20,000 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 75,000 பேர் நன்மையடைவர்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரீன் சுச், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லய் மருகி, AFD நிறுவனத்தின் பணிப்பாளர் மார்டின் கேன்ட், நீர்கொழும்பு மாநகர சபை மேயர் தயான் லன்சா,கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ச ,மேல் மாகாணசபை உறுப்பினர் M.S.M.சகவுல்லா, நீர்கொழும்பு மாநகர சபை துணை முதல்வர் M.A.S. பரீஸ், முன்னால் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன மற்றும் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர் ஹபுஆராச்சி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.