TNL ஊடக வலையமைப்புக்கு சொந்தமான பொல்கஹவெலயிலுள்ள அலைவரிசை மீள்ஔிபரப்பு நிலையத்தின் ஔிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது.
பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய அந்த நிலையத்தில் இருந்த ஔிபரப்பு உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த நிலையத்தின் செயற்பாடு முடக்கப்பட்டதன் காரணமாக சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் பல பிரதேசங்களில் ஔிபரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக TNL ஊடக வலையமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவிக்கையில், அனுமதியின்றி தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நடத்திச் செல்லப்படுவது சம்பந்தமாக நேற்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறினார்.
அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக நீதிமன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அதன்படி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அங்கிருக்கும் ஔிபரப்பு உபகரணங்களை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் பொல்கஹவெல பொலிஸார் இது தொடர்பில் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.