ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுகிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்-எழுத்தாளர் ஜெயபாலன்

கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்-எழுத்தாளர் ஜெயபாலன்

0Shares

கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வட கிழக்கு மாகாணம் தமிழர் அலகு, முஸ்லிம்களின் அலகு, சிங்களவர் அலகு என பிரிந்து செல்வது மட்டும் தான் தெரிவாக இருக்கும் என பிரபல சமூக ஆய்வாளரும் சர்வதேச எழுத்தாளருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும் – எனது நிலைபாடும் (NORTH EAST MEAGER THE MUSLIMS AND MY STAND) என்ற அறிக்கையில் அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம்கள் தான் தீர்மானம் எடுக்க வேண்டுமே ஒழிய தமிழர்கள் தீர்மானம் எடுக்க உரிமை இல்லை என நெடுங்காலமாக குரல் கொடுத்து வருகிறவன் நான் என்பதை அறிவீர்கள். அப்படிப்பட்ட நான் எப்படி கிழக்கு தமிழர்கள் தொடர்பாக முஸ்லிம்கள் முடிவெடுக்க முடியும் என சொல்ல முடியும்?

வட கிழக்கு முஸ்லிம்களுக்கும் வட கிழக்கு தமிழனுக்கும் சுய நிர்ணய உரிமை உள்ளது என்பது தான் என் நிலைபாடு. கிழக்கில் பெரும்பாலான தமிழர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து வடக்குடன் இணைவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

இதுபற்றி உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? இணைய வேண்டாம், எங்களோடு இருங்கள் என முஸ்லிம் மக்கள் கிழக்குத் தமிழருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்களா? அப்படி ஒரு பேரியக்கம் செயல்பட்டால் சொல்லுங்கள். மகிழ்ச்சி அடைவேன். இணைவது பற்றியும் முஸ்லிம் அலகுகள் பற்றியும் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றியும் ஆய்வுகளும் இயக்கங்களும் நடந்தாலும் சொல்லுங்கள். மனப்பூர்வமாக உதவுவேன், அதை விடுத்து கிழக்கு தமிழர் வடக்குடன் இணைய முடியாது என்று அவ்வப்போது தீர்மானம் சொல்வதை நான் எப்படி ஆதரிக்க முடியும்? கிழக்கு தமிழருடன் பேசுங்கள் சுதந்திரமான பேச்சுவார்த்தை நிகழ்வதற்கும் சுதந்திரமாக முடிவுகள் எடுப்பதற்கும் நான் உழைக்கிறேன். இதைத்தான் நான் சொல்ல முடியும்.

தனி அலகுகள் பற்றி ஆய்வு பேச்சு அரசியல் வேலைகளில் ஈடுபடுங்கள் ஆதரிக்கிறேன். ஒன்றும் செய்ய மாட்டோம் தமிழர் என்ன செய்ய வேண்டுமென முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு என்று சொன்னால் நான் என்ன சொல்ல முடியும்.

இது போர்க்காலத்தில் உருவான மனநிலை. முதலில் அரசியல் ஈடுபாடுள்ள சில முஸ்லிம் அறிஞர்களும் சில இளைஞர்களும் போர் எப்பவோ முடிந்துவிட்டது என்பதை உள்வாங்கி செயற்பட வேண்டும்.

சமாதான காலத்து மனநிலையால் மட்டுமே சமாதான காலத்தின் புதிய சமன்பாடுகளையும் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு சமாதான காலத்தில் வெற்றிகரமாகச் செயல்பட முடியும்.

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என்கிற கோரிக்கை கிழக்குத் தமிழர்கள் கிழக்கு முஸ்லிம்களுடன் இணைய வேண்டும் என்கிற கோரிக்கையாகும். ஒரு கோரிக்கை இரு சாராரும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒற்றுமைப்படுவதன் அடிப்படையில் வென்றெடுக்கப்படலாம்.

ஆனால் ஒரு கோரிக்கையை போர்க் காலத்தில் கூட உத்தரவாக முன்வைக்க முடியாது. இது சமாதான காலம். ஒருதலை பட்சமாக தமிழர்கள் விரும்பினாலும் இணைய முடியாது எனச் சொல்ல முடியாது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

கிழக்கு முஸ்லிம்கள் கிழக்கு தமிழர்களை வென்றெடுத்தால் மட்டுமே கிழக்கு தமிழர்கள் வடக்கை பிரிந்து முஸ்லிம்களோடு இணையும் சூழலையை உருவாக்க முடியும்.

அப்போது தான் கிழக்கு தமிழன் வடக்குடன் இணையாமல் எங்களோடு இணைவார்கள் என்று முஸ்லிம்கள் சொல்ல முடியும். அத்தகைய ஒரு சூழல் உருவானால் நிச்சயம் நான் அதனை ஆதரிப்பேன். அப்போது மட்டும் தான் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானதாகவும் சாத்தியமானதாகவும் மாறும்.

கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் வட கிழக்கு இணைப்புக்குள் அல்லது வடக்கோடு இணையாமல் வாழ்வதென இணக்கப்பாட்டுக்கு வந்தால் அந்த தீர்வு எதுவாக இருந்தாலும் நான் அதை ஆதரிப்பேன்.

இந்த சமாதான காலத்தில். கிழக்கு தமிழர்களும் கிழக்கு முஸ்லிம்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இணைந்து வாழ முடிவெடுத்தால் மட்டுமே தார்மீக ரீதியாக வட கிழக்கு இணைப்பை தவிர்த்தல் சாத்தியமாகலாம்.

எனக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் சமத்துவமாக சமாதானமாக நீதியுடன் வாழவேண்டும் என்பது தான் இலட்சியக் கனவாக உள்ளது. இனத்துவ அரசியலில் குயில்களுக்கு இடமில்லை. அவரவர் கூட்டை அவரவர் தான் கட்ட வேண்டும். தமது கூட்டை தாமே கட்டும் பணியில் இருக்கிற இனங்களுக்குத்தான் நண்பர்களால் கூட உதவிட முடியும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments