பிரதி சபாநாயகர் தெரிவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அந்த பதவிக்கு நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. அதேபோல் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் தமது தரப்பில் எவரையும் பரிந்துரைப்பதில்லை என்று முடிவு
செய்துள்ளதாக நம்பகமாக தெரியவருகின்றது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் சிங்கள புத்தாண்டு வாரத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார். இதன் போது பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் ஒருவரான முன்னாள் பிரதி சபாநாயகர் தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.
இதன் பின்னர் பிரதி சபாநாயகர் ஒருவர் இல்லாது எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கூடும் பாராளுமன்ற அமர்வுகளில் பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
புதிதாக பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ள நிலையில் யாரை நியமிப்பது என்பதில் பிரதான கட்சிகள் இடையே கடந்த காலத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பெயர் ஆரம்பத்தில் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயரும் கடந்தவாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட அங்கஜன் இராமனாதனை நியமிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் சுயாதீனமாக செயற்படும் 16 பேர் கொண்ட அணியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளயை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவரையே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நியமிக்க கட்சியிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஆனந்த குமாரசிறியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்பை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஒருவரை பரிந்துரைக்கப்போவதில்லை எனவும் அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகவே நாளை கூடவுள்ள பாரளுமன்ற அமர்வுகளின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்படுவார் என தெரிய வருகின்றது.
இதேவேளை சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனுக்கு கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் அவரை அந்தப் பதவிக்கு நியமிக்கக் கூடாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்தே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆனந்தகுமாரசிறியின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்ததுடன் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்தே தற்போது சுதந்திரக் கட்சியின் சார்பில் சுதந்திர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயை நியமிப்பதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.