பொது நலன் என்பதை குறிக்கோளாக கொண்டு 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றமானது, தகவலறியும் உரிமைச் சட்டத்தினை நிறைவேற்றியதன் மூலம் பிரஜைகளின் அடிப்படை உரிமையான தகவலறியும் உரிமைக்கு வலுச்சேர்த்துள்ளது. ஆயினும் இதனை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் மற்றும் பொது மக்களும் தோல்வி கண்டுள்ளனர். இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக, தமிழ் பேசும் மக்களுக்கு தகவலறியும் உரிமை மறுக்கப்படுவதினை சுட்டிக்காட்டலாம்.
ஆம், தகவலறியும் உரிமை என்பது நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சமமானதொன்றாகவே சட்டம் சொல்கின்றது. ஆனால் நடைமுறையோ வேறு. அந்தவகையில், தகவலறியும் உரிமைச் சட்டமானது தமிழருக்கு வெறும் பெயரளவிலேயே காணப்படுகின்றது. காரணம் அரச கரும மொழியாக தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத் துறைசார் நிறுவனங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. இது தமிழ் பேசும் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே அனைத்து தரப்பினரும் கணிப்பிட்டுள்ளதை வெளிப்படுத்துகின்றது. அதன்படி, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அரசியலமைப்புகளை, அதனை இயற்றும் அரசாங்கங்கள் சர்வதேச நாடுகளின் மத்தியில் தன் அந்தஸ்தை நிலைநாட்டிக் கொள்ள மேற்கொள்ளும் ஓர் அரசியல் இராஜதந்திரமாகவே கருதவேண்டியுள்ளது. தகவலறியும் உரிமை என்பது பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுள் முக்கியமானவொன்றாகும்.
அவற்றுடன் அதனை தங்கள் மொழிகளிலேயே பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது வெறும் கண்துடைப்பாகவே இதுவரையுள்ளது. பொது நிறுவனங்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓர் விண்ணப்பத்தை பதிவு செய்யும் வேளையில், அந்த நிறுவனங்களில் தமிழ் மொழியில் தகவல் வழங்க கூடிய ஓர் அதிகாரி காணப்படாமை தமிழ் பேசும் மக்களுக்கு தகவல் வழங்குவதில் காணப்படும் அசமந்த போக்குத்தன்மையையும் வெளிப்படுத்துகின்றது. அவற்றுடன் இச்சட்டத்தின் கீழ் பொது அதிகாரசபைகள் என்பது அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் உள்ளடக்குவதோடு சில சந்தர்ப்பங்களில் தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் உள்ளடக்குகின்றது.
ஆயினும், 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இன்று வரையில் ஒரு வருடமும் 10 மாதங்களும் கடந்துள்ள நிலையில் இவ்வாறானவொரு சட்டம் இலங்கையில் உள்ளமை பொது மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் தெரியவில்லை என்பது கசப்பான ஓர் உண்மையாகும்.மேலும் கல்வி அமைச்சின் கீழ் வரும் அனைத்து கல்விசார் நிறுவனங்களிலும், நீதி அமைச்சு சார் அரச நிறுவனங்களில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் என அரச நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் இவ்வனைத்து நிறுவனங்களிலும் தமிழ் பேசும் அல்லது தமிழ் அறிவு கொண்ட தகவல் வழங்கும் அதிகாரி காணப்படவில்லை.
குறிப்பாக மலையக பகுதிகளில் காணப்படும் கல்வி வலயங்களான கொத்மலை, கட்டுகஸ்தோட்டை, வெல்லவாய போன்ற வலய கல்வி திணைக்களங்களில் தமிழ் மொழி மூல அதிகாரிகளும் இல்லை. அங்கு கடமையாற்றும் சில அதிகாரிகளுக்கு எவ்வாறு கோரிக்கையாளரின் உரிமையை பெற்றுக் கொடுப்பது என்ற தெளிவும் இல்லை. ஓர் கல்வி துறைசார் நிறுவனத்திலே தமிழ் மொழி தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் காணப்படவில்லையாயின் ஏனைய அரசசார் நிறுவனங்களின் நிலையென்ன?அதேபோல் குறித்த அரச நிறுவனங்களில் இணையத்தளங்கள் தினமும் பதிவிடப்படவில்லை. அவற்றில் அதிக நிறுவனங்களில் தமிழ் மொழி மூல இணையத்தளங்கள் காணப்படவில்லை.
சில நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் என்றாலே என்ன என்று தெரியவில்லை. தகவலொன்றை பெற்றுக்கொள்ள அவசியப்படின் மிக இலகுவான இணையத்தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிடுவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றது. ஓர் விண்ணப்பம் பதியப்பட்டு தகவல் கிடைக்க குறைந்த பட்சம் 28 நாட்கள் செல்லும் நிலையில் தபால் மூலம் விண்ணப்பம் உரிய இடத்தை சென்றடைய மேலும் நான்கு நாட்கள் தேவைப்படுவதும் கோரிக்கையாளரை சலிப்படைய வைக்கும் செயலாகும்.
இவ்வாறான பல குழப்பங்களுக்கு மத்தியிலேயே தகவலொன்றினை நாம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றைத் தாண்டி இவ்வுரிமையை பிரஜைகள் முழுமையாக அனுபவித்திட சில விடயங்கள் குறித்து அறிந்திருத்தல் அவசியமாகும். அந்தவகையில், அறிமுகம்இச்சட்டமானது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தகவலறியும் உரிமைச் சட்டத்தை தங்கள் மொழிகளிலேயே பெற்றுக் கொள்வது கோரிக்கையாளரின் உரிமையாகும். அதனுடன் கோரிக்கையாளர் தன் கோரிக்கையை முன்வைப்பதற்கும் மேன்முறையீடு செய்வதற்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை.
இலத்திரனியல் வடிவத்திலும் தபால், பக்ஸ், மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் கோரிக்கையை முன்வைக்கலாம்.கோரிக்கையாளர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் தவிர்ந்த ஏனைய பிரத்தியேக விபரங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கையை நிராகரிப்பதற்கான சகல விதிவிலக்குகளும் பொதுநலன் என்ற மேலோங்கிய அடிப்படையில் வெளிப்படுத்தப்படலாம் என்ற முக்கிய விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தகவலறியும் ஆணைக்குழுவால் குறித்துரைக்கப்படும் கட்டண அட்டவணையில் குறிப்பிடப்பட்டதற்கமைய கோரிக்கை விடுப்பவர் கட்டணமொன்றைச் செலுத்தல் வேண்டும். கோரிக்கையாளரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட தகவலை பரிசீலிப்பதற்கும் அதனை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளவும் பொது மக்களுக்கு அனைத்து உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளானது மக்களை நேரடியாக பாதிக்கும் விடயங்களில் அதிகமாக தாக்கம் செலுத்தப்படலாம். எழுத்தறிவில்லா குழுவினருக்கும் தகவலறியலாம். அதற்காக எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைக்க முடியாத சந்தர்ப்பத்தில் வாய்மொழி மூலமாக கோரிக்கையை முன்வைக்க அதனை தகவல் அலுவலர் எழுதிக்கொள்ள வேண்டும். அவ்வாறே எம்முறையிலாயினும் கோரிக்கையை பெற்றுக் கொண்டதற்கான அறிவிப்பொன்றை உடனடியாக வழங்குதல் வேண்டும். தகவல் அதிகாரிஒவ்வொரு பொது அதிகாரி சபையும் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் அதிகாரிகளை கொண்டிருப்பர். சில சந்தர்ப்பங்களில் சக அலுவலர்கள் தகவல் வழங்குவதற்கு உதவ வேண்டியது கட்டாயமாகும். அதனுடன், தகவல் அலுவலர் நியமிக்கப்படும் வரையில் அந்நிறுவனங்களில் தலைவர் அல்லது பிரதான நிறைவேற்று அதிகாரி தகவல் அதிகாரியின் கடமைகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார்.
இவர்கள் தொடர்பான தகவல்களை இணையத்தளத்திலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். பொது அதிகார சபைகள் 10 வருட தகவல்களையே பேணவேண்டிய கடப்பாடு உடையவர்கள். ஆயினும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குறித்த தகவல் தொடர்பில் வழக்கு தொடரப்படுமாயின் அந்த தகவல்களை வழக்கின் தீர்ப்பு வரையில் அழிவுக்குட்படுத்த முடியாது. மேலும் பொது அதிகார சபைகள் அனைத்து தகவல்களையும் சரியான முறையில் இலத்திரனியல் வடிவும் பேணிவருதல் அவசியமாகும். பொது மக்கள் அணுக கூடிய விதத்தில் பொது அதிகார சபைகள் ஆண்டறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும். இவை சரியா நிகழ்கின்றனவா என்பதை மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் கவனத்தில் கொள்ளுதலும் அமைச்சர்களின் கடமையாகும். கோரிக்கையாளரின் உரிமம் கோரிக்கையாளர் தகவலினை பெற்றுக் கொள்ள 14 நாட்கள் காத்திருத்தல் வேண்டும்.
கோரிக்கை பெறப்பட்டதையும் தகவல்கள் கிடைக்கும் கால எல்லை மற்றும் அதனை நீடிப்பதாயின் அது குறித்த விடயங்கள் அனைத்தையும் கோரிக்கையாளருக்கு தெரியப்படுத்துதல் தகவல் அதிகாரியின் கடமையாகும். அந்தவகையில் ஒரு கோரிக்கையின் மூலம் 14 தொடக்கம் 21 நாட்களுக்குள் தகவலை பெற்றுக்கொள்ள இயலும். எனினும் கோரப்பட்ட தகவலானது ஒருவரின் உயிர் சம்பந்தப்பட்ட விடயம் எனில் 48 மணிநேரத்திற்குள் அத் தகவலை பெற்றுக் கொடுக்க தகவல் அதிகாரி கடமைப்பட்டுள்ளார். கோரிக்கையாளருக்கு தகவலை பெற்றுக் கொள்வதற்கு சகல உரிமையுமுண்டு. ஆவணங்களை பரிசீலனை செய்தல், பிரதி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், இறுவட்டு, நெகிழ்வட்டு, நாடாக்கள்,ஒளிப்படத் தட்டு அல்லது வேறு இலத்திரனியல் வடிவத்திலும் தகவலை பெற்றுக் கொள்ள உரிமையுடையவர்களாவீர்கள். அவ்வாறே கோரிக்கையாளர் கோரிக்கை மறுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும் உரித்துடையவர்களாவர்.
எல்லா உரிமைகளையும் போலவே இந்த உரிமையும் முழுமையானதல்ல வரையறுக்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் அவை மறுக்கப்படலாம். எனினும் ஒரு நியாயமான நோக்கத்திற்கு குந்தகம் விளைவிக்குமென்ற போதிலும் வெளியிடுகையில் பொது நலன் இருப்பின் அதனை வெளியிடவேண்டும். தகவல்கள் வழங்க மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் தனிப்பட்ட நபரின் அந்தரங்க விடயங்களின் போது மறுக்கப்படலாம். ஆயினும் பொது ஆர்வத்தை தூண்டக்கூடியதாயின் அது வெளிப்படுத்தப்படல் வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, நடைமுறையில் உள்ள சர்வதேச ஒப்பந்தங்கள் குறித்து தகவல் மறுக்கப்படலாம். நாட்டின் பொருளாதாரம் தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள், புலமைச் சொத்துக்கள், தனி நபர் மருத்துவ தகவல்கள், நீதிமன்ற வழக்குகள், அந்தரங்கம் காக்க வேண்டிய சட்டசிக்கல் கொண்ட தேர்தல் மற்றும் அமைச்சரவை குறிப்பறிக்கை தொடர்பாக தகவல் மறுக்கப்படலாம். 10 வருடங்கள் கடந்த தகவலாயின் வழங்கப்படலாம்.
ஆயினும் வர்த்தக ஒப்பந்தங்கள் முடிவுறும் வரையில் வெளியிட முடியாது. தகவல் வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பான மேன்முறையீடு தகவலறியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், விதிவிலக்கான காரணங்களை காட்டி தகவல் அலுவலர் தகவலை வெளியிட மறுத்தால், நேர வரையறையை பின்பற்றாது விட்டால், பிழையான தகவல்களை வழங்கினால், கூடிய கட்டணம் அறவிடப்பட்டால், கோரப்பட்ட வடிவத்தில் தகவல் வழங்க மறுத்தால், தகவல் உருமாற்றம் அல்லது அழிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்ய இயலும். மேன்முறையீடு மேன்முறையீட்டை மேற்கொண்டால் மூன்று வேலை நாட்களுக்குள் பற்றுச் சீட்டினை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவற்றுடன் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மூன்று வாரங்களுக்குள் வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்படின் அதற்கான காரணத்தை கோரிக்கையாளருக்கு அறியத் தரல் வேண்டும். அவற்றுடன் தகவலறியும் விண்ணப்பம் விண்ணப்பிக்கப்பட்டு தகவல் கிடைத்து அல்லது வேறு காரணங்களினால் மேற்கொள்ளப்படும் மேன்முறையீடு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
மேன்முறையீடு மேற்கொள்வதற்கு தாமதம் ஏற்படின், அத்தாமதத்திற்கான காரணம் உங்கள் கட்டுப்பாட்டினை விஞ்சியதாயின் அதனை ஆணைக்குழு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆணைக்குழுவும் அதன் தீர்மானங்களை எழுத்துமூலமே வழங்க வேண்டும். ஆணைக்குழு தீர்மானத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம். இதன்போது மேன்முறையீட்டில் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நிரூபிக்க வேண்டியது பொது அதிகார சபைகளின் கடப்பாடாகும். எழுத்து மூலம் நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில் கோரிக்கையாளர் சார்பில் வேறொருவர் நீதிமன்றில் வழக்கு தொடரலாம். சட்டத்தை மீறும் போது வழங்கப்படும் தண்டனைபிழையான தகவல் வழங்கினால், விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லையாயின், தகவல்களை அழித்தால், சிதைவுக்குட்படுத்தல், ஆணைக்குழு தீர்மானங்களை நிறைவேற்ற தவறின், ஆணைக்குழு தீர்மானத்தை மீறி தகவல்களை வழங்கினால் ஐம்பதாயிரத்துக்கு மேற்படாத தண்டப்பணத்திற்கு அல்லது இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படுவர்.
அவற்றுடன் தகவல் அதிகாரிக்கு உதவ மறுப்பின் உதவியாளரும் குற்றவாளி அவருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும். இவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். ஆணைக்குழுசுயாதீனமான ஆணைக்குழுவொன்றே இயங்கும். அதில் மூவர் காணப்படுவர். இருவர் அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்டவர். மற்றவர் ஊடக துறை சார்ந்தவர். இவர்கள் பாராளுமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதியில் செயலாற்றுவர். அது தொடர்பான கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்படும். முடிவுரைஇதனால் விரைவில் இணையத்தின் மூலம் தகவல் அறியும் கோரிக்கையை முன்வைக்க கூடிய வாய்ப்பினையும், தமிழ் பேசும் மக்கள் தங்கள் மொழிகளிலேயே தகவல் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும், பொது பணியிலுள்ள அனைவருக்கும் தகவலறியும் உரிமைச் சட்டம் குறித்த போதனையையும் பெற்றுக்கொடுப்பதன் மூலம் மேலும் இச்சட்டத்தை வலுப்படுத்திட முடியும்.
இதனை உரிய அமைச்சரும் ஆணைக்குழுவும் பாராளுமன்றமும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எனவே உங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து அறிந்து கொள்ளக்கூடிய அனைத்து உரிமையும் பாராளுமன்றம் எமக்கு வழங்கியுள்ளது. அதனை பறித்திட யாராலும் இயலாது. ஆகவே அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பூரண அறிவை பெற்றுக்கொள்ள முயல வேண்டும். அவற்றுடன் அசமந்த போக்கான செயற்பாடுகளை விடுத்து செய்வதை திருந்த செய்திட முயலவேண்டும். –
இரோஷா