லீக் சுற்று முடிவில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் லீக் தொடரில் அதிக வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு பிராத்வய்ட் 43 ரன்களும், கேன் வில்லியம்சன் மற்றும் யூசுப் பதான் தலா 24 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 139 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேன் வாட்சன் (0), சுரேஷ் ரெய்னா(22), அம்பத்தி ராயூடு (0), என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறி பெரும் அதிர்ச்சியளித்தனர்.
பின்னர் வந்த தோனி (9), டூவைன் பிராவோன் (7), ஜடேஜா (2), தீபக் சாஹர் (10), ஹர்பஜன் சிங் (2) என களமிறங்கிய அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் மறுமுனையில் சென்னை அணியின் மற்றொரு துவக்க வீரரான டூபிளசிஸ் நிலைத்து நின்று விளையாடியதன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய டூபிளசிஸ் சென்னை அணிக்கு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கொடுத்தது மட்டுமல்லாமல் சென்னை அணியை இறுதி போட்டிக்கும் அழைத்து சென்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த த்ரில் வெற்றியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறது.