நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்படவுள்ளது.
தனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும் தனிநபர் அடையாளத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ளது. அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை கொண்டுவருவது இதுவே முதல் தடவையாகும். எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தொலை பேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை குழு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தில் கூடி தொலை பேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்கள் கசிவு விவகாரம் குறித்து கலந்துரையாட உள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் எந்தவொரு பிரஜைக்கும் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
எனவே நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.