ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜனப் பெரமுனவும் தனித்தனியே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இரண்டு தரப்பினரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமற்றுப் போயுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் தனித்து வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஏற்கனவே பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்காக வேட்பாளர்களை தெரிவுசெய்துவிட்டது. அதுமட்டுமன்றி பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற அடிப்படையில் போட்டியிடும் நோக்கில் கட்டுப்பணத்தையும் செலுத்தியுள்ளது.
இதேவேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடும் நோக்கில் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பணியில் மும்முரப்படுத்தியிருக்கிறது. வேட்பாளர் தெரிவு மிக மும்முரமாக இடம்பெற்று வருவதாக சுதந்திரக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இரண்டு கட்சிகளும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தனியே பேட்டியிடும் நோக்கில் வேட்பாளர் தெரிவில் மும்முரம் செலுத்தியுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 60 வீத தொகுதிமுறைமையிலும் 40 வீத விகிதாசார முறைமையிலும் உள்ளூராட்சிமன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவுசெய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.