பொது எதிரணி தனித்தே போட்டி என்கிறார் கெஹெலிய
தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்துள்ள ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எவ்விதத்திலும் ஒன்றித்து பயணிக்க முடியாது. எனவே இனி பேச்சுவார்த் தைக்கான வாய்ப்புகள் இல்லை. உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது என்று பேச்சுவார்த்தைக்கான எதிரணி இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹேலிய ரம்புக்வல தெரிவித்தார்.
கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 42 பேரரும் அனைத்து எதிரணி பங்குதாரர்களும் இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரக்கட்சியுடன் பொது எதிரணி ஒன்றிணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தவிடயம் குறித்து கேட்டபோதே கெஹேலிய ரம்புக்வல எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் 7 நிபந்தனைகளை முன்வைத்து எதிரணியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களான நாம் கட்சியின் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அதில் முதலாவது நிபந்தனையே ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டாட்சியில் இருந்து விலக வேண்டும் என்பதாகும். இதனை இழுத்தடிப்பிற்குள் தள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவுடன் இனி ஒன்றிணைவது சாத்தியமற்ற விடயமாகும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கடந்த மாதம் 19 ஆம் திகதி கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் வெற்றிப்பெறுவது எமது நோக்கமாகும். எவ்வாறாயினும் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை வெற்றிப்பெறுவதாயின் பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதராவாளர்கள் மத்தியில் நம்பிக்கையை முதலில் வெற்றிக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து சுதந்திர கட்சி கொள்கை மாறியுள்ளது. எனவே எதிர் வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவதாயின் 7 நிபந்தனைகளையும் நல்லாட்சியில் உள்ள சுதந்திர கட்சி அமுல்படுத்த வேண்டும்.
அதாவது ஐக்கிய தேசிய கட்சியுடன் முன்னெடுக்கப்படுகின்ற கூட்டாட்சியில் இருந்து சுதந்திர கட்சி உடனடியாக வெளியேற வேண்டும். எவ்விதமான கட்டுப்பாடுமின்றி அதிகரிக்கப்படும் வாழ்க்கை செலவை குறைக்க வேண்டும். மேலும் தேசிய வளங்களை அந்நிய நாடுகளுக்கு விற்கும் நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆட்சியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பதவிகளை துறந்து போராட வேண்டும் என்பவை எமது நிபந்தனைகளின் சிலவாகும்.
இவை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாயின் ஆதரவு வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். உள்ளுராட்சிமன்ற தேர்தில் வெற்றிப்பெறுவதற்கு இந்த விடயங்கள் மிகவும் முக்கியமானவையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரையில் சாதகமான பதிளில்லை. எனவே இனிவரும் காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது ஆட்சியில் உள்ள சுதந்திர கட்சியினருடனோ எவ்விதமான பேச்சுக்களையும் இனி முன்னெடுப்பதில்லை என்பதே கூட்டு எதிர் கட்சியின் தற்போதை தீர்மானமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.