வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எச்சரிக்கை
வடக்கு,கிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ் பேசும் மக்களை பாதிக்கும். பௌத்த சிங் கள மக்களின் கையை ஓங்கவைக்கும். இதனால் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை சீர்குலையும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கி னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு இணைப்பு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உருவாகமுடியாது. தமிழ் பேசும் வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்கு சமச்சீரில்லாத தனி அலகை உருவாக்குவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகிழக்கை இணைக்கவேண்டும் என்ற தங்களின் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை ஊட்டுவதாக அமைகின்றதே என்று முதலமைச்சரிடம் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; இன்றைய வடகிழக்கின் நிலையை நோக்குங்கள். எமது மக்கள் பத்து இலட்சம் அளவில் வௌிநாடு சென்றுவிட்டார்கள். அரசாங்கம் வௌிமாகாணங்களில் இருந்து தமிழ்ப் பேசும் மக்கள் அல்லாதவர்களை வடகிழக்கில் குடியேற்றி வருகின்றார்கள். முன்னர் காலத்திற்குக் காலம் மீன் பிடிக்க வந்த தெற்கத்தைய மீனவர்கள் இப்பொழுது நிரந்தர வசிப்பிடங்களை அமைத்து தமிழ்ப்பேசும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிப்படையச் செய்துள்ளார்கள். அவர்கள் தமது புலம் விட்டுச் செல்ல வழிவகுத்துள்ளார்கள். இராணுவம் ஒன்றரை இலட்சம் பேர் 65000 ஏக்கர் காணிகளில் வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ளார்கள். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் எமக்குப் போதுமான அதிகாரங்கள் இல்லை. ஆளுநர் கூடிய அதிகாரங்களை வைத்துக் கொண்டுள்ளார். தெற்கில் இருந்து முதலீட்டாளர்கள், வணிகர், வாணிபர் என்று பலரும் வந்து எமது வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள். உணவகங்கள் உள்ளிட்ட வியாபார ஸ்தலங்கள் பலவற்றை இராணுவத்தினரும் கடற்படையினரும் நடத்தி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை.
போதைவஸ்த்துப் பாவனை எம் இளைஞர்களிடையே பரவி வருகின்றது. அதனால் வன்முறையும் பரவி வருகின்றது. பாலியல் குற்றங்கள் மலிந்து வருகின்றன. கட்டுப்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை. வடகிழக்கில் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்பதை நான் கூறி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எமது தொகை குறைகின்றது. மற்றவர்களின் தொகை கூடுகின்றது. தமிழ் மக்களுடைய சனப் பெருக்க வீதமே சகல இனங்களுக்குள்ளும் ஆகக் குறைந்தது என்று கூறப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் தொகை படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. இன்னிலையில் தமிழ்ப் பேசும் மக்கள் வடகிழக்கில் சேர்ந்து வாழ வேண்டுமா பிரிந்து வாழ வேண்டுமா? பிரிந்து வாழ்ந்தால் எமது நிலை சீர் கெட்டுவிடும். பறங்கியர்களுக்கு இந் நாட்டில் ஏற்பட்ட கதியே இன்னும் 25 வருடங்களில் எமக்கும் ஏற்பட்டுவிடும். எம்மவர் வௌியேறி விடுவார்கள். மிகுதி இருப்பவர்களைப் பெரும்பான்மைச் சமூகம் உட்கிரகித்துக் கொள்ளும். ஆகவே வடகிழக்கு இணைப்பு ஒன்றே எமக்குப் பலத்தை அளிக்கும். எமது மக்கட் தொகை அருகி வருவதைத் தடுக்கும்.
ஆனால் வட கிழக்கு இணைப்பு தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உருவாக முடியாது. தமிழ்ப் பேசும் வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்கு சமச்சீரில்லாத (யுளலஅஅநவசைஉயட) தனி அலகை உருவாக்குவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு இனிச் சாத்தியமாகும். இந்தியாவின் பங்கு இதில் இனி இருக்காது என்பது தௌிவு. 18 வருடங்களுக்கு வடகிழக்கு இணைந்திருந்ததெனில் அது இந்தியாவின் உள்ளீடலால்த்தான்.
எனவே இன்றைய நிலையில் வடகிழக்கு இணைவு அவசியம் என்பது எம் மக்கள் யாவருக்குந் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ்ப் பேசும் மக்களைப் பாதிக்கும். பௌத்த சிங்கள மக்களின் கையை ஓங்க வைக்கும். இதனால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமையும் சீர் குலைந்து போகும்.
எமது அதிகாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே நாம் இன்று உள்ளோம். வடகிழக்கு இணைப்பு, சுயாட்சி, சமஷ்டி போன்ற கருத்துக்கள் வெறும் கருத்துக்கள் அன்று. எமது பாதுகாப்புக்கான கேடயங்கள். அவற்றை நாம் கைவிட்டால் எம்மை அடிபணிய வைப்பதும் அடியற்றுப் போக வைப்பதும் இலகுவாகிவிடும். இதனை எம்மக்கள் வரவேற்கின்றார்களா?
எமது மக்கள் தனிநாடு கோருவதையும் அதற்காக உணர்ச்சி மேலீட்டில் உரக்கக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கத்தைக் கெட்டியடையச் செய்யுமே தவிர எம்முடன் சுமூகமாக நடந்து கொள்ள உதவாது. வடகிழக்கு இணைப்பு என்பது தனி நாடொன்றை உருவாக்க நாம் போடுஞ் சதி என்றே அரசாங்கம் பிறநாட்டு இராஜதந்திரிகளுக்குக் கூறிவருகின்றது. அதனால் சர்வதேச கருத்துக்கள் வடகிழக்கு இணைப்புக்கு எதிராகவே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் அரசாங்கத்திற்குச் சார்பாகவே அமைந்துவிட்டுள்ளது. தனிநாடு என்பது பிற வல்லரசுகளின் தயவுடனேயே இயற்றப்பட முடியுமே தவிர நாம் கேட்டுப் பெறக் கூடியதொன்றல்ல. அடித்துப் பறிக்க முடியும் என்ற கருத்தும் அண்மையில் மௌனிக்கப்பட்டுவிட்டது. நாம் தனித்து வாழத் தலைப்பட்டால் தலை நாடுகளின் சார்பாளர்களாகவே நாங்கள் மாற நேரிடும். என்றும் மாறாத பகைமையை எமது சிங்கள சகோதரர்களுடன் நாம் பாராட்ட வேண்டிய ஒருநிலை ஏற்படும். உண்மையில் ஆயுதங்கள் மௌனித்ததும் தனி நாட்டுக்கான கோரிக்கையும் அவற்றுடன் மௌனிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணத்தைச் சிலர் இன்னமும் தம் உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் இந் நாட்டு மக்களிடையே சுமூக உறவு ஏற்பட முடியாது என்பதை எம்மவர் ஆய்ந்துணர்வார்களாக! எமது மக்கள் வௌிநாடுகளில் இருந்து கொண்டு இங்கு எமது நிலைமையறியாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இங்கு இன சௌஜன்யம் வளர இடம் கொடுக்க வேண்டும்.
முஸ்லிம் தலைவர்கள் வடகிழக்குக்கு வௌியில் இருந்து வரும் போது அவர்களின் தேர்தல் தொகுதியில் வடகிழக்கு இணைப்பு எடுபடாது என்ற காரணத்தினால் அவர்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கவே செய்வார்கள். முஸ்லிம் தனி அலகொன்றை உறுதி செய்த பின் வடகிழக்கு இணைப்பு பற்றிய கருத்தறியும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் மக்களின் பாதுகாப்புக்கும் தனித்துவத்தைப் பேணுவதற்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் தெற்கில் உள்ள சிங்கள மக்களை உள்ளடக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் உள்ள சிலர் எதிர்பார்ப்பது நியாயமான ஒரு கோரிக்கை அன்று. எமது வருங்காலத்தை நாம் தீர்மானிக்க எமக்கு உரித்து அளிக்கப்பட வேண்டும்.
ஆகவே சிலருக்கு எரிச்சலை மூட்டுகின்றதோ இல்லையோ எமது பாதுகாப்புக்கும் நாம் தொடர்ந்து இங்கு வாழ்வதற்கும் ஏற்புடைத்தான ஒரு மார்க்கத்தை நாம் வலியுறுத்துவது எந்த விதத்திலும் பிழையாகாது.
இவ்வாறு வடகிழக்கு இணைப்பில்லா இனப்பிரச்சினைத் தீர்வொன்றை நாம் நாடினால் எமது இனம் அழிய அது அடிகோலும் என்பதே உண்மை.