சீனாவும் கனடாவும் சர்வதேசக் கடல் எல்லைகளை மீறுவதாகவும், தேவையற்ற ராணுவ மோதலை தூண்டுவதாகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
தென்சீனக் கடல் வழியாகச் சென்ற தனது ஹெலிகாப்டருக்கு சீனாவின் போர் விமானங்கள் ஆபத்தை விளைவிப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சில அறியப்படாத காரணங்களுக்காக கனேடிய ஹெலிகாப்டர் தனது தீவுகளை நோக்கி பறந்ததாக சீனா கூறுகிறது.
தென் சீன கடலில் சர்வதேசக் கடல் எல்லையில் பறந்து கொண்டிருந்த தனது ஹெலிகாப்டருக்குச் சீன போர் விமானங்கள் ஆபத்தை ஏற்படுத்தியதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் விமானங்கள் கனேடிய ஹெலிகாப்டருக்கு மிக அருகில் வந்து அதன் மீது உயர் வெப்ப அலைகளை உமிழ்ந்ததன் மூலம் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன ஜெட் விமானங்கள் நேரடியாக ஹெலிகாப்டரை கடந்து சென்றதாகவும், அதனால் அது தள்ளாடியதாகவும் பிளேர் கூறினார். பின்னர் மற்றொரு ஜெட் விமானம் ஹெலிகாப்டருக்கு மிக நெருக்கமாக வந்து அதன் மீது உயர் வெப்ப அலைகளை உமிழ்ந்தது. அதைத் தவிர்க்க ஹெலிகாப்டர் திடீரென்று தனது பாதையை மாற்ற வேண்டியிருந்தது, என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இதன் மூலம், தேவையில்லாமல் அனைவரும் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தது. சீனப் போர் விமானங்களின் இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை,” என்றார் அவர்.
பிளேரின் கூற்றுகளுக்குப் பதிலளித்த சீனா, ‘கனேடிய ஹெலிகாப்டர் சில ரகசிய நோக்கங்களுக்காக, தீங்கிழைக்கும் வகையிலும், எதிர்வினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டது,’ என்று கூறியிருக்கிறது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாங் ஷோகாங், கனடாவின் போர்க்கப்பலின் பெயரை மேற்கோள் காட்டி ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்தில், கனடாவின் எச்.எம்.சி.எஸ் ஒட்டாவாவில் இருந்து வந்த ஹெலிகாப்டர், சில அறியப்படாத நோக்கங்களால், சீனாவின் சிஷா தீவுகளை நோக்கி வந்தது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர், “கனடாவின் நடவடிக்கைகள் சீனாவின் உள்நாட்டுச் சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகவும், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், கனடாவின் விமானப்படையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்,” என்றார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;