இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அசுர பாய்ச்சல் நடத்தினர். இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களில் சுருண்டது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது இந்திய அணி.
இதனால் இலங்கை அணி 19.4 ஓவர்களுக்குள் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் இழந்தது இலங்கை அணி. பும்ரா வீசிய முதல்ஓவரின் முதல் பந்தில் பதும் நிஷாங்கா டக் அவுட் ஆனார். இதேபோல், இரண்டாவது ஓவரை வீசிய சிராஜ்ஜும் தனது ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். அவரின் முதல் பந்தில் திமுத் கருணாரத்ன டக் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் சதீர சமரவிக்ரம சிராஜ்ஜால் டக் அவுட் செய்யப்பட்டார். இதன்பின் 4வது ஓவரை வீசியபோதும் முதல் பந்திலேயே ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த இலங்கை கேப்டன் குஷல் மெண்டிஸை க்ளீன் போல்ட் செய்தார். இப்படியாக தான் வீசிய 7 பந்துகளில் ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்களை வீழ்த்திய சிராஜ் இலங்கையை அலறவிட்டார்.
இதன்பின் சீனியர் வீரர் மேத்யூஸ் மற்றும் சரித் அசலங்கா இணைந்து ரன்கள் ஏதும் எடுக்காவிட்டாலும் விக்கெட் சரிவில்லாமல் விளையாடினார். ஆனால், 10-வது ஓவரை வீசிய ஷமி, அதற்கும் பங்கம் விளைவித்தார். சிராஜ், பும்ரா போல் இல்லாமல் தனது மூன்றாவது பந்தில் அசலங்கா விக்கெட்டை எடுத்தார். அடுத்த பந்திலேயே துஷான் ஹேமந்தாவை வந்தவேகத்தில் பெவிலியனுக்கு ரிட்டர்ன் அனுப்பினார். இப்படி, தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார் முகமது ஷமி. இதனால், 10 ஓவர்கள் முடிவில் 14 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது இலங்கை அணி.
12-வது ஓவரை மீண்டும் வீசிய ஷமி இந்த முறை துஷ்மந்த சமீராவையும், 14வது ஓவரில் மேத்யூஸையும் வெளியேற்றினார். இதனால் 29 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்களை இழந்தது இலங்கை. இதன்பின் 18வது ஓவரில் ரஜிதாவை கேட்ச் மூலம் அவுட் ஆக்கி நடப்பு தொடரில் இரண்டாவது ஐந்து விக்கெட்டை எடுத்தார் முகமது ஷமி. இறுதியில் மதுஷங்க விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த 19.4 ஓவர்களுக்கு 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்த அணி தரப்பில் ஷமி 5 விக்கெட், சிராஜ் 3 விக்கெட், ஜடேஜா மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இலங்கை வீரர்களில் 5 பேர் டக் அவுட் ஆகினர். இருவர் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்தனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;