ColourMedia
WhatsApp Channel
Homeமுகப்புஇங்கிலாந்து அணியின் வீழ்ச்சி எங்கிருந்து தொடங்கியது?

இங்கிலாந்து அணியின் வீழ்ச்சி எங்கிருந்து தொடங்கியது?

0Shares

8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்ததை அடுத்து உலகக் கோப்பை 2023 தொடரின் ஐந்து போட்டிகளில் நான்காவது தோல்விக்கு இங்கிலாந்து சரிந்தது. இதனால் ஜோஸ் பட்லரின் அணி அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் “இங்கிலாந்து உலகக் கோப்பையில் இவ்வளவு மோசமாக ஆடியதில்லை. இங்கிலாந்துக்கு இது ஒரு மோசமான உலகக் கோப்பை” என்று சாடியுள்ளார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களான டி20 மற்றும் 50 ஓவர் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, இலங்கையிடம் தோல்வி கண்டு அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. ஜாஸ் பட்லர் அணிக்கு என்னதான் ஆனது? 2015 உலகக் கோப்பையில் இதை விடவும் மோசமான தோல்விகளைச் சந்தித்து வெளியேறிய பிறகே கேப்டன் இயான் மோர்கன் இந்த அணியை மேலேற்றிக் காட்டுகிறேன் என்று ஒரு அட்டாக்கிங் மனநிலையை, பண்பாட்டை வீரர்களிடத்தில் கஷ்டப்பட்டு விதைத்து ஏகப்பட்ட வெற்றிகளைக் குவித்து 2019 உலகக் கோப்பையை வெல்வதில் முடிந்தது.

ஆனால், முன்னங்காலை விலக்கிக் கொண்டு எந்த பவுலராக இருந்தாலும் வெளுத்து வாங்கிய அணுகுமுறை கடந்த 2 ஆண்டுகளாக பின்னங்காலுக்குச் சென்றுவிட்டது குழப்பமடையச் செய்துள்ளது. 2019 உலகக் கோப்பை சாம்பியன் ஆன பிறகே இங்கிலாந்தின் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் கடும் சரிவடைந்துள்ளது. மாறாக, மற்ற அணிகள் வளர்ச்சி கண்டுள்ளன. ஓராண்டுக்கு முன்னர்தான் பட்லர் தலைமையில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து. ஆகவே, இந்தச் சரிவு மிகவும் சமீபத்திய சரிவு என்றே சொல்லலாம்.

வாழ்க்கையில் ஒரு தனிமனிதனின் செல்வாக்கு எப்படியோ கிரிக்கெட்டில் அப்படித்தான். அணிகளின் செல்வாக்கைக் கட்டமைக்க ஒரு யுகம் கூட ஆகலாம். ஆனால், சிதைந்து போவதற்கு அதிக நேரம் தேவையில்லை என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக் ஆர்த்தர்டன். ஆம், இங்கிலாந்தின் சரிவு அந்த அணியின் தன்னம்பிக்கை சரிவுதான். பேட்டர்களில் ஒருவர் கூட நல்ல ஃபார்மில் இருப்பது போல் தெரியவில்லை. நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்த விதம் இங்கிலாந்து கிரிக்கெட் 2015 உலகக் கோப்பைக்கு முந்தைய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீசி டாப்லி உண்மையில் உலகக் கோப்பை அணியில் இல்லை. ஆனால், டாப்லி இல்லை என்று பெரிய கூக்குரல்கள் எழுந்தன. உடனே தேர்வு செய்யப்பட்டார். இப்போது என்னவாயிற்று அவர் உடல் தகுதி சுத்தமாக இல்லாத நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 50 ஒவர் கிரிக்கெட்டுகளில் அதிகம் ஆடவில்லை என்று கூறலாம். அதுதான் சரிவுக்குக் காரணம் என்று கூறலாம். ஆனால், எல்லா அணிகளுக்கும்தான் இது பொருந்தும்.

இதே உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தட்டுத்தடுமாறியதிலிருந்து இப்போது மீண்டெழவில்லையா? இங்கிலாந்துக்கு ஏன் இது சாத்தியமில்லை என்றால், இங்கிலாந்து அணி எப்போதுமே ‘poor travellers’ என்று வர்ணிக்கப்படுவதுண்டு. அவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியே வந்து விட்டால் அவர்களுக்கு ஒன்றுமே விளங்காது. தூசி தும்பட்டை என்பார்கள். உணவு சரியில்லை என்பார்கள். வயிற்று வலி, வாந்தி பேதி என்பார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் அழுகாச்சியை போடும் அணிதான் இங்கிலாந்து என்று சுனில் கவாஸ்கர் கிண்டல் செய்வதுண்டு.

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து 42 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக இருதரப்பு தொடர்களும் சரிவர ஆட முடியவில்லை. உள்நாட்டு டி20 லீக்குகள் பெருத்தும் விட்டன. இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் தொடரும் புகுத்தப்பட்டது. இங்கிலாந்தின் 50 ஓவர் கிரிக்கெட் உள்நாட்டு தொடருக்கு முதல்தர கிரிக்கெட் தகுதி நீக்கப்பட்டு விட்டது. இவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. இதனால் 50 ஓவர் கிரிக்கெட் ஆடும் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் போய் விட்டனர். டி20 என்பது பவுலருக்கு 4 ஓவர்கள் போட்டால் போதும், ஆனால் ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் வீச வேண்டும். 4 ஓவர்களுக்கான உத்தியை 10 ஓவர்கள் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து கடைப்பிடிக்கிறது என்பதுதான் அவர்கள் பந்து வீச்சு இந்த சாத்து வாங்குவதற்குக் காரணம்.

பென் ஸ்டோக்சை கொண்டு வந்தால் அவர் பந்து வீச முடியாது. ஜேசன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர் உடற்தகுதி பெறவில்லை. பந்து வீச்சில் அணியில் தேர்வான கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ரீசி டாப்லி, சாம் கரண் பந்து வீச்சில் மிகவும் அலட்சியம் காட்டினர். பேட்டிங்கில் அதேபோல் மெயின்ஸ்டே என்று வர்ணிக்கப்படும் ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர் அலட்சியமாக ஆடுகின்றனர். அதாவது, நாம் ஆடுவது உலகக்கோப்பை என்ற நினைவே இல்லாமல் ஆடுவது போல் உள்ளது இங்கிலாந்து அணியின் உடல் மொழி.

ஃபார்மில் இருக்கும் ஓவர்டன் சகோதரர்கள், பில் சால்ட், பென் டக்கெட், வில் ஜாக்ஸ் போன்றோரைத் தேர்வு செய்யவில்லை. ஜாக் கிராலி இப்போதெல்லாம் பிரமாதமாக ஆடுகிறார். ஜேமி ஸ்மித், சாம் ஹெய்ன் ஆகியோரோடு லெக் ஸ்பின்னர் ரெஹான் அகமதுவும் வாய்ப்புப் பெற்றிருக்க வேண்டும் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய வீரர்கள் குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இதே அணியில் கஸ் அட்கின்ஸன் துல்லிய யார்க்கர்களை வீசுவதோடு பேட்டிங்கிலும் கடைசியில் இறங்கி நன்றாக ஆடுகிறார். இவரை இலங்கைக்கு எதிராக உட்கார வைக்கின்றனர். எப்படி வெல்ல முடியும்?

ஒரு விதத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ், மீண்டும் உலகக் கோப்பைக்காக ஓய்விலிருந்து வெளியே வந்தது இங்கிலாந்தின் திட்டங்களையே குட்டிச்சுவராக்கி விட்டது என்றே தோன்றுகிறது. இந்தியாவுக்கு எதிராக அடுத்தப் போட்டியில் வரும் ஞாயிறன்று இங்கிலாந்து விளையாடுகிறது.

எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments