மும்பை: கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா நடப்பு உலகக் கோப்பை தொடரின் அடுத்த 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
13-ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ளன. வரும் அக்டோபர் 29-ம் தேதி லக்னோவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கணுக்காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைபெற்று வரும் அவர் முழு உடல்தகுதி பெறாததால் அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் அகாடமி தரப்பில் (National Cricket Academy), “ஹர்திக் பாண்டியா சிகிச்சையில் இருக்கிறார். அவரது இடது கணுக்காலில் உள்ள வீக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. இருப்பினும் அவருக்கு இப்போதைக்கு ஓய்வு தேவை” என தெரிவித்துள்ளது.
மேலும், “பாண்டியாவுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. பிசிசிஐ மருத்துவக்குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதால் அடுத்த 2 போட்டிகளில் அவர் விளையாடமாட்டார். முழு உடல்தகுதி பெற்ற பின்னரே அணிக்குத் திரும்புவார்” என பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா அடுத்து 29-ம் தேதி இங்கிலாந்துடனும், நவ.2-ம் தேதி இலங்கையுடனும் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா காயம்: கடந்த அக்டோபர் 19-ம் தேதி புனேயில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்தை தடுக்க முயன்றபோது ஹர்திக் பாண்டியாவின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் கடந்த அக்டோபர் 22-ம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.