நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 23-வது போட்டியில் வங்கதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டிகாக் மற்றும் கிளாசன் அதிரடியாக ஆடி இருந்தனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்தது. டிகாக், 140 பந்துகளில் 174 ரன்கள் எடுத்திருந்தார். 15 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். கிளாசன், 49 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கேப்டன் மார்க்ரம், 69 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார் மில்லர்.
383 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. இருந்தும் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் மஹமுதுல்லா சிறப்பாக விளையாடி 111 ரன்கள் எடுத்தார். அது அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது. 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். அதன் மூலம் 149 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது