நடப்பு உலகக்கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான, இந்தியா – பாகிஸ்தான் மோதல், குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், கேப்டன் பாபர் ஆசமின் விக்கெட்டிற்குப் சீட்டுக்கட்டு போல சரசரவென வீரர்கள், சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு சுருண்டது.
எளிய இலக்குடன் சேஸிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா தனது பாணியில் அதிரடியான தொடக்கத்தை தந்தார். சுப்மன் கில்லும், விராட் கோலியும் 16 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித்தின் அதிரடியால் மைதானத்தில் குவிந்திருந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் குதூகலமடைந்தனர். ரோகித் 86 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயரும், கே.எல்.ராகுலும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.