நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்வதற்கான பயணிகள் கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது. இன்று நாகை வந்தடையும். நாளை சோதனை ஓட்டம் நடைபெறும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்காக கடந்தமாதம் அமைச்சர் எ.வ.வேலு, நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.
பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியதும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும். இதில் ஒரு கப்பல், நாகப்பட்டினத்தில் இருந்து காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகம் நோக்கி செல்லும். எதிர் திசையில் இலங்கையில் இருந்து மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி கப்பல் புறப்படும்.