தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியின்போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு உதவியாக ஓடிய சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அநுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் பலாகல, குடாஹெட்டியாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (22) இந்த விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் உதவிக்காக ஓடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென வீதியில் விழுந்ததையடுத்து, அவர் கலாவௌ கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது, வழியிலேயே கெகிராவ பிரதேசத்தில் வைத்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் 10 வயதுடைய, பலாகல – குடாஹெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.குறித்த சிறுவனின் சகோதரன் மற்றும் நண்பர்கள் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த நிலையில், அவர்களின் உதவிக்காக இவரும் போட்டியாளர்களுடன் ஓடியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது