மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின சுப்மன் கில்லுக்கும் ஆட்டத்தின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே போட்டியின் வெற்றிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா “களத்தில் முடிவுகளை எடுக்கும்போது தைரியமாகத்தான் செயல்படுவேன். எனக்கு சிக்ஸர்கள் அடிக்கப் பிடிக்கும். ஆனால் அணியின் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும். அணி வீரர்களுக்கு நான் இன்னும் களத்தில் தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதும் முக்கியமானதாகப்படுகிறது
அழுத்தம் நிறைந்த சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். முன்பு கீழ் வரிசையில் நிதானமாக விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனி இருந்தார். நான் எனது இஷ்டம்போல அதிரடியாக விளையாடினேன். ஆனால் இப்போது அவர் இல்லாததால் நிதானமாக விளையாடும் பொறுப்பு என் மீது வந்திருக்கிறது. எந்தவித தயக்கமும் இன்றி அதை நான் எடுத்துக் கொள்கிறேன். இதனால் எனது ஸ்ட்ரைக் ரேட் குறையும் என்பதைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் அணியின் வெற்றிக்கு முன்பு ஸ்ட்ரைக் ரேட் ஒன்றும் பெரிதல்ல” என்று தெரிவித்துள்ளார்