இந்தியா – நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டி நாளை(ஜனவரி24) இந்தூரில் நடக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஷுப்மன் கில்லுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவின் விக்கெட் சர்ச்சையை கிளப்பியது. 28 ரன்களுக்கு இன்னிங்ஸின் 40வது ஓவரில்
ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்டியா. டேரைல் மிட்செல் வீசிய பந்து, ஹர்திக் பாண்டியாவின் பேட்டிலும் படவில்லை; ஸ்டம்ப்பிலும் படவில்லை. நியூசி., விக்கெட் கீப்பர் டாம் லேதமின் க்ளௌஸ் பட்டு ஸ்டம்ப்பில் லைட் எரிந்தது. ஆனால் அதற்கு ரிவியூ கேட்டு, அதற்கு தேர்டு அம்பயரும் போல்டு என்று அவுட் கொடுக்க, தேர்டு அம்பயரின் இந்த முடிவு கடும் சர்ச்சைக்குள்ளானது. விக்கெட் கீப்பரின் க்ளௌஸ் ஸ்டம்ப்பில் பட்டதற்கு தேர்டு அம்பயர் அவுட் கொடுத்தது பெரும் சர்ச்சையானது..
விக்கெட் கீப்பர் டாம் லேதமுக்கு நடந்த உண்மை தெரியும். ஆனால், இருந்தும் கூட அவர் சொல்லவில்லை. அவரை கிண்டலடிக்கும் விதமாகவும், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அவர் பேட்டிங்கின்போது தடுப்பாட்டம் ஆடியபோது பந்தை பிடித்த இஷான் கிஷன் ஸ்டம்ப்பில் அடித்துவிட்டு அப்பீல் செய்தார். ஒருவேளை ஹிட் விக்கெட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் தேர்டு அம்பயரிடம் கள நடுவர்கள் ரிவியூ செய்தனர். அது அவுட்டில்லை என்பது தெரிந்தும்கூட அப்பீல் செய்த இஷான் கிஷனும் கேப்டன் ரோஹித்தும், களநடுவர்கள் தேர்டு அம்பயரிடம் ரிவியூ செய்தபோது கமுக்கமாக நின்றனர். அதை ரிவியூ செய்து தேர்டு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஷான் கிஷன் அதை செய்திருந்தாலும், அம்பயரை ஏமாற்றும் விதமாக வேண்டுமென்றே அப்பீல் செய்தது ஐசிசி விதிப்படி தவறு. இஷான் கிஷன் செய்தது லெவல் 3 குற்றம் ஆகும். ஆனாலும் அவருக்கு ஐசிசி எந்த தண்டனையும் அளிக்கவில்லை. போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுந்தது.
ஆனால் ஐசிசி நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் உள்ளது. இதுதொடர்பாக கள நடுவர்கள் போட்டி ரெஃப்ரீ ஸ்ரீநாத்திடம் புகார் அளித்திருந்தால், இஷான் கிஷனுக்கு 4 ஒருநாள் போட்டிகளில் ஆடக்கூட தடை விதிக்கப்பட்டிருக்கலாம். கள நடுவர்கள் புகார் அளிக்காததால், ஐசிசி இஷான் கிஷன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனாலும் போட்டி ரெஃப்ரி ஜவகல் ஸ்ரீநாத் தனிப்பட்ட முறையில் இஷான் கிஷனை அழைத்து கண்டித்ததுடன், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இதுகுறித்து பேசினார். இஷான் கிஷனின் செயலை வர்ணனையின்போதே சுனில் கவாஸ்கர் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.