மொழிஉரிமை தொடர்புகளை ஏற்படுத்தும் நவீன அழைப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் அமைக்கப்பட்டுள்ள நவீன அழைப்பு நிலையத்தினை ஆரம்பித்து வைத்து அது தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் உரையாற்றுகையில் ,
இந்த நவீன அழைப்பு நிலையத்தின் மூலமாக, +94714854734 என்ற இலக்கத்தை பயன்படுத்தி வட்ஸப், வைபர், இமோ சமூக ஊடகங்கள் மூலமாகவும், இவற்றுக்கு மேலதிகமாக முகநூல் மூலமாகவும் மொழி உரிமை மற்றும் மொழிச்சட்ட அமுலாக்கல் தொடர்பான பிரச்சனைகளை எமது அமைச்சுக்கு அறிவிக்கலாம்.
இந்த புதிய தொடர்பாடல் முறைமைகளுக்கு மேலதிகமாக 1956 இலகு அழைப்பு (Hot Line) இலக்கமும், https://www.facebook.com/LanguageRIGHTS/ என்ற முகநூல் பக்கத்தின் மூலமாகவும் தொடர்புகளை ஏற்படுத்தமுடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பெயர் பலகைகள், பொது பாவனை படிவங்கள் ஆகியவை மும்மொழிகளில் இல்லாதவிடத்து, மொழி பாவனையில் எழுத்து இலக்கண பிழைகள் இருக்குமிடத்து அவற்றை படம் பிடித்து எமக்கு அனுப்பி வைக்கலாம். இவற்றை அனுப்பும்போது அந்த மொழிச்சட்ட மீறல் நிகழ்ந்துள்ள இடம், அலுவலகம், காலம் என்பவை பற்றியும் எமக்கு அறியத்தர வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களின் பாவனை இருபத்து நான்கு மணித்தியாலமும் அமுலில் இருக்கும். இதற்கு மேலதிகமாக வழமையான 1956 என்ற இலகு அழைப்பு இலக்கமும் பாவனையில் உள்ளது. இதன்மூலம் அலுவலக நேரங்களில் நேரடியாக அழைப்புகளை ஏற்படுத்தி அழைப்பு நிலைய அலுவலகர்களுடன் உரையாடி தகவல்களை தெரிவிக்கலாம் அல்லது பெற்றுக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டார்.
இந்த நவீன அழைப்பு நிலையம் மூலம் குறிப்பிட்ட சொற்களின் மொழிபெயர்ப்புகள் மற்றும் விபரங்கள் ஆகியவற்றையும் பெறலாம். இந்த வசதியை எதிர்காலத்தில் இன்னமும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும், அத்துடன் அனைத்து அரச நிறுவனங்களும் தமது பெயர் பலகைகளை அமைக்கும் போதும், பொது பாவனை படிவங்களை அச்சடிக்கும் போதும் எம்முடன் தொடர்பாடலை ஏற்படுத்த இன்னமும் மத்தியப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப செயன்முறைகளை விரைவில் இந்த அழைப்பு நிலையத்தின் ஊடாக செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்த அழைப்பு நிலையம் மூலமாக, எனது அமைச்சின் இன்னொரு கடமையான தேசிய சகவாழ்வு பிரச்சனைகளை உள்வாங்கும் முறைமை பற்றியும் தற்போது நான் ஆலோசித்து வருகிறேன் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதன்மூலம் நாடு முழுவதும் இன, மத பதட்ட நிலைமைகள் உருவாகும் அறிகுறிகள் காணப்படுமானால் அவற்றை எமக்கு அறிவிக்கமுடியும். எமது அமைச்சின் மூலம் அவற்றை சட்டம், ஒழுங்கு துறையினருக்கு அறிவிக்கும் வழி முறைகளை தற்போது ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லா புகார்களும், வரிசைப்படுத்தப்பட்டு உரிய மேல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும். அவற்றை அமைச்சின் மொழி உரிமை பிரிவும், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவும் கண்காணித்து வழிநடத்தி அமைச்சருக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.