பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனை அடுத்து நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் அவர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
சுமார் இரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் சுகாதார விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தாலும் இறுதியில் சமுர்த்தி கொடுப்பனவு பற்றியும், மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாலின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், “தோட்டத் தொழிலாளர்கள் 5 ஆயிரம் ரூபாயிற்கு குறைவான சம்பளம் பெறும் பட்சத்தில், குறைவான தொகையை ஈடுசெய்யும் வகையில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வகையிலேயே சுற்று நிரூபத்தில் ஏற்பாடு உள்ளது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடனும் கலந்துரையாடி, ஏதேனும் தவறு இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் மீண்டும் அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.