இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படுவதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் பரவுவதற்கு முன்னர் இந்த நாட்டின் முதலாவது நோய் தொற்றுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டவுடனே நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை சவாலுக்கு உள்ளாவதை தவிர்க்க, கல்வி அமைச்சு பாடசாலைகளை மூடும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது. நாட்டின் சிறார்களின் வாழ்க்கை பெறுமதியை உணர்ந்து அவர்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பை முதன்மையாகக் கொண்டு அத்தீர்மானத்தை மேற்கொண்டவாறே கொண்டவாறே பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவையும் நடைமுறைப்படுத்தும் என்று கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய பணியாளர் குழுவினரை மே 11 ஆம் திகதி சேவைக்கு வருகை தருமாறும், முதலில் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்காக ஜூன் 01 ஆம் திகதி அளவில் அனைத்து தரங்களில் உள்ள மாணவர்களுக்காவும் பாடசாலைகரள ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. கல்வி அமைச்சின் செயலாளர் எந்த ஒரு மாகாண கல்வி பொறுப்பாளருக்கோ அல்லது வேறு கல்வி நிறுவன தலைவருக்கோ அவ்விதம் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை.
மீண்டும் பாடசாலை திறக்கப்படுதல் மற்றும் திறக்கப்படும் விதமானது சுகாதார அமைச்சின் அறிவுரை மற்றும் அரசினால் மேற்கொள்ளப்படும் கொள்கை நடைமுறைக்கு அமைவாக தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி செயலாளரினால் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது மாகாண வலய மற்றும் கல்வித் துறையின் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களை அறியச் செய்யப்பட்டே எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்விச் செயலாளர் தெளிவுபடுத்தினார்