மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி சட்டவிரோதமாக 710கிலோ மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் பொலிஸாரால் கைது
ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் 8 மாடுகளை வெட்டி இறைச்சியாக புத்தளம் மாவட்டத்தில் இருந்து கம்பஹா மாவட்டத்துக்கு குளிரூட்டப்பட்ட லொரி ஒன்றில் கொண்டுவந்த ஒருவரை நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமான் சிகெரவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த லொரியை தோப்பு சந்தியில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் அதில் 710கிலோ மாட்டு இறைச்சியும் 8 மாடுகளின் முழு தலைகள் இருந்ததாகவும் மாடுகளை வெட்டுவதற்க்கான சுகாதார அனுமதி பத்திரங்கள் எதுக்கும் பெற்றுக்கொள்ளாமல் மாடுகளை வெட்டியுள்ளதாகவும்,
அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போது முறையான ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரம் இல்லாமல் புத்தளம் மாவட்டத்தில் இருந்து கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டு வந்தமைக்காகவே குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீ நிக்க ஜயகொடிய அவர்கள் தெரிவித்தார்.
சந்தேகநபர் இன்றயதினம் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா