ஊரடங்கு சட்டத்தினால் தமது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் கட்டுநாயக்கக சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு நீர்கொழும்பு பொலிஸார் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக தமது ஊர்களுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ள கட்டுநாயக்கக சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் தற்காலிகமாக வேலை செய்யும் (Manpower) ஊழியர்கள், அண்மித்த பிரதேசங்களில் பல்வேறு தொழில்களை செய்யும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஆகியோருக்கு உலர் உணவுப் பொருட்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் இன்று (சனிக்கி;ழமை) முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.
நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் சிலருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்வில் நீர்கொழும்பு பிராந்தியத்திற்குட்பட்ட 11 பொலிஸ் நிலையங்களைச் செர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பதினொரு பொலிஸ் பிரிவுகளிலும் தங்கியுள்ள பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் வசிக்கும் வீடுகளுக்குச் போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்று உலர் உணவுப் பொருட்களை கையளித்தனர். 2000 இற்கும் மேற்பட்ட உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கப்பட்டன.
இதற்கு அடையாளமாக இன்று சீதுவை , கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுகளில் சிக்கியுள்ள ஊழியர்கள் சிலர் நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு பஸ் வண்டிகளில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நிகழ்வில் உரையாற்றினார்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா