நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு வியாழக்கிழமை (16) அன்று உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹானின் வேண்டுகோளின் பேரில் கொழும்பு இலக்ட்ரிகல் சேர்விஸ் அசோசியேசன் (Colombo Electrical Traders association) என்ற அமைப்பின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட்டன
அந்த அமைப்பின் தலைவர் சுதத் தம்மிக்க சம்ரவிக்ரம ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கு பாடசாலை அதிபர் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலருடன் நேரில் சென்று வழங்கினார்.
இந்த உதவியை பெற்றவர்களில் வெலிஹேன பிரதேசத்தில் ஒரு சிறிய பலகை வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வரும் நெருங்கிய உறவினர்களான மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர்களைக் கொண்ட குடும்பமும் அடங்கி உள்ளது. இவர்கள் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
உதவி பெற்றவர்களில் அனேகமானவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். குறிப்பாக மலையகத்தில் சேர்ந்தவர்களாவர். இங்கு தற்காலிகமாக தங்கியிருந்து பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்கள் . அனேகமானவர்கள் கூலித் தொழிலாளர்களாவர்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா